×

ஏரியில் சடலமாக மிதப்பதாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு கழுத்தளவு நீரில் தியானம் செய்த வாலிபர் படம் உண்டு

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ஏரியில் கழுத்தளவு நின்று வடமாநில வாலிபர் தியானம் செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் சடலம் மிதப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி கிராமத்தில் உள்ள ஏரி சுமார் 88 ஏக்கர் பரப்பளவை கொண்டது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஏரி நிரம்பி உள்ளது. இந்நிலையில், இந்த ஏரியில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் தலை மட்டும் தெரியும் அளவில், உடல் முழுவதும் நீரில் மூழ்கியபடி நின்று நேற்று காலை 7 மணி முதல் நின்றிருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஏரியில் சடலம் மிதப்பதாக நினைத்து உடனடியாக போலீசார் மற்றும் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் ஏலகிரி ஊராட்சி மன்ற தலைவர் ரகு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரை கரையேறி வரும்படி கூறினர். ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை. பிறகு தீயணைப்பு வீரர்கள் நேற்று மதியம் ஏரியில் இறங்கி அந்த வடமாநில வாலிபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விசாரணையில், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த நித்திஷ்(30) என்பதும், ரயில் மூலம் கோவையில் உள்ள ஈஷா சிவன் கோயில் செல்வதற்காக வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையில், ஜோலார்பேட்டையில் இறங்கி அங்கிருந்து ஏலகிரி மலைக்கு வந்தபோது ஏரியில் இறங்கி தியானத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், போலீசார் அவரை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் நேற்று காலை முதல் மதியம் வரை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post ஏரியில் சடலமாக மிதப்பதாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு கழுத்தளவு நீரில் தியானம் செய்த வாலிபர் படம் உண்டு appeared first on Dinakaran.

Tags : Jollarpet ,North State ,Citizens ,
× RELATED கூகுள் மேப்களில் எஸ்பிஐ ஏடிஎம்களை...