×

ஏரலில் நடுரோட்டில் அரசு பஸ் திடீர் பழுது

ஏரல், ஏப். 29: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், 3வது பெரிய வணிக நகரமாக உள்ளது. இங்குள்ள காந்தி சிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ் நிலையம் வரையுள்ள மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக திங்கட்கிழமை வாரச்சந்தை நடப்பதால், அதிகளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. நேற்று ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் குருபூஜை விழாவை முன்னிட்டு போக்குவரத்து அதிகமாக இருந்தது.
இந்நிலையில் மதியம் நாசரேத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பயணிகளை ஏற்றி வந்த அரசு பஸ் திடீரென ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப்பில் நடுரோட்டில் திடீர் பழுதாகி நின்றது.

இதன் காரணமாக அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் வெகுதூரம் அணிவகுத்து நின்றன. இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு அவர்களை அவ்வழியாக வந்த மற்றொரு அரசு பஸ்சில் அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார், பொதுமக்கள் உதவியுடன் நடுரோட்டில் நின்றிருந்த பஸ்சை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்ய முயன்றனர். ஆனால் பஸ் ஸ்டார்ட் ஆகாததால் ஏரல் காவல் நிலையம் அருகில் கொண்டு ஓரமாக நிறுத்தினர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

நிரந்தர தீர்வு காணப்படுமா ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ் நிலையம் வரை ரோட்டில் பல இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற சாலையோரம் மாற்றியமைக்க வேண்டும் என்பது இப்பகுதி வியாபாரிகள், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.

The post ஏரலில் நடுரோட்டில் அரசு பஸ் திடீர் பழுது appeared first on Dinakaran.

Tags : Airal ,Thoothukudi district ,Gandhi Statue ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...