×
Saravana Stores

ஊராட்சி அலுவலகம் முன் 100 நாள் வேலை தொழிலாளர்கள் தர்ணா கண்ணமங்கலம் அருகே பரபரப்பு பண்ணைக்குட்டை அமைக்கும் பணியை நிறுத்தியதால்

கண்ணமங்கலம், செப்.3: கண்ணமங்கலம் அருகே ஊராட்சி அலுவலகம் முன் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீரென திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணமங்கலம் அடுத்த மேல்நகர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் இந்த திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணி கடந்த வாரம் நடந்தது. அப்போது, அங்கு வந்த ஏரி பாசன சங்க தலைவர், இது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி. இது எங்களுக்கு சொந்தமானது. இங்கு யார் உங்களை வேலை செய்ய சொன்னது என தகராறு செய்தாராம். எனவே, மேற்பார்வையாளர் வேலையை நிறுத்திவிட்டு, அங்கிருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று மீண்டும் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஏரி பாசன சங்க தலைவர் தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்ததோடு, அவர்களை தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு, மேல்நகர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் ரத்னா அன்பழகன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் யுவராஜ் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அரசிடம் உரிய ஆணை பெற்று 100 நாள் பணியை மீண்டும் தடையின்றி தொடர வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஊராட்சி அலுவலகம் முன் 100 நாள் வேலை தொழிலாளர்கள் தர்ணா கண்ணமங்கலம் அருகே பரபரப்பு பண்ணைக்குட்டை அமைக்கும் பணியை நிறுத்தியதால் appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,Panchayat ,Dharna Kannamangalam ,Dinakaran ,
× RELATED அகமலையில் மண்சரிவு ஏற்பட்ட சாலையில் சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு