×

உழவர் சந்தையில் தினசரி 30 டன் காய்கறி விற்பனை

தர்மபுரி, ஆக.6: தர்மபுரி உழவர் சந்தையில், தினசரி சராசரியாக 30 டன் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுமார் 5 ஆயிரம் நுகர்வோர்கள் வாங்கி செல்கின்றனர். தமிழகம் முழுவதும் 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. தர்மபுரியில் கடந்த 2000ம் ஆண்டு, உழவர் சந்தை திறக்கப்பட்டது. பின்னர், ஏ.ஜெட்டிஅள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. காரிமங்கலத்தில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 5 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. தர்மபுரி உழவர் சந்தையில் மட்டும், தினசரி சராசரி 30 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மதிப்பு ₹10 லட்சம். 120 விவசாயிகள் 60 வகையான காய்கறிகள் கொண்டு வருகின்றனர். தினசரி சுமார் 7300 நுகர்வோர் வந்து காய்கறி, பழங்கள் வாங்கி செல்கின்றனர். விசேஷம் மற்றும் பண்டிகை காலங்களில் கூடுதலாக காய்கறி விற்பனையாகிறது.

இதே போல், ஏ.ஜெட்டிஅள்ளியில் 9.50 டன் காய்கறியும், பாலக்கோட்டில் 8.40 டன்னும், பென்னாகரத்தில் 7.30 டன்னும், அரூரில் 8.20 டன் காய்கறி, பழங்கள் தினசரி விற்பனை செய்யப்படுகின்றன. காய்கறி விற்பனையில், தர்மபுரி உழவர் சந்தை முன்னிலையில் உள்ளது. இந்த சந்தையில் மட்டும், மாதம் சராசரியாக 900 டன் காய்கறி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 935 டன் காய்கறி வந்தது. மே மாதம் 960 டன்னும், ஜூன் மாதம் 844 டன்னும், ஜூலை மாதம் 910 டன் காய்கறியும் விற்பனைக்கு வந்தன.

இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், காய்கறி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளே நேரடியாக காய்கறி விற்பனை செய்யும் இடமாக, உழவர் சந்தை உள்ளது. மாவட்டத்தில் 5 இடங்களில் உழவர்சந்தைகள் இயங்கி வருகின்றன. இந்த சந்தைகளில் தினசரி சுமார் 64 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மதிப்பு ₹20 லட்சம் ஆகும். ஒரு மாதத்திற்கு 1920 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மதிப்பு ₹5.80 கோடியாகும். தர்மபுரி உழவர் சந்தையில் மாதம் 900 டன் காய்கறி வருகிறது. இது ₹2.50 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ₹2.67 கோடியும், மே மாதம் ₹2.77 கோடியும், ஜூன் மாதம் ₹3.29 கோடியும் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தர்மபுரி உழவர் சந்தையில் மாதம் சராசரியாக 1.50 லட்சம் நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். கடந்த ஏப்ரலில் 1.87 லட்சம் நுகர்வோரும், மே மாதத்தில் 1.92 லட்சமும், ஜூன் மாதம் 1.68 லட்சம் நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கி சென்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post உழவர் சந்தையில் தினசரி 30 டன் காய்கறி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Market ,Dinakaran ,
× RELATED கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது