×

இலவச வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய நோட்டீஸ்: கலெக்டர் நடவடிக்கை

திருப்பூர், டிச.24: ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் நிபந்தனைப்படி வீடு கட்டாததால் 48 பேரின் இலவச வீட்டுமனை பட்டாவை ரத்து செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் நடவடிக்கை மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் நிலமெடுப்பு செய்து குறிப்பிட்ட காலத்துக்கள் வீடு கட்டிக்கொள்ள இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. இதில், இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் இனம் கண்டறிய இயலாத நிலை ஏற்பட்டால் ஏற்கனவே வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட இடத்தில் கள விசாரணை செய்த போது அந்த இடத்தில் பயனாளிகள் வசிக்கவில்லை என்பதும், இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளை அடையாளம் காண முடியவில்லை. பட்டாவில் தெரிவிக்கப்பட்டபடி உரிய காலத்துக்குள் வீடு கட்டி குடியிருக்காததால் பட்டாவை ரத்து செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு 15 நாட்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ கலெக்டர் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரிக்கு அனுப்பி வைக்கலாம். தவறும் பட்சத்தில் வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்படும். அதன்படி உடுமலை தாலுகா புக்குளத்தில் 2 பேர், கொங்கல் நகரத்தில் 16 பேர், தாராபுரம் தாலுகா காளிபாளையத்தில் 10 பேர், பொன்னிவாடி கிராமத்தில் 16 பேர் என மொத்தம் 48 பேரின் பட்டாவை ரத்து செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

The post இலவச வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய நோட்டீஸ்: கலெக்டர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Adi Dravidar Welfare Department ,Dinakaran ,
× RELATED விடுதி வார்டன் சஸ்பெண்ட் மாணவர்கள் உண்ணாவிரதம்