×

இயற்கை விவசாயத்தில் தூய்மை பணியாளர்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு: ரயில் நிலையத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை

நாகப்பட்டினம்,ஆக.14: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மேலும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்ஸ்டாண்ட், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், தலைவர்களின் சிலைகள் ஆகியவற்றில் போலீசார் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (15ம் தேதி) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருப்பு பாதை பிரிவு சப்- இன்ஸ்பெக்டர்கள் காவிரி, உதயகுமார், மனோன்மணி, குணசேகரன், ரயில்வே பாதுகாப்பு படை சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் உள்ளிட்ட போலீசார் நேற்று (13ம் தேதி) முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ரயில் நிலைய நடைமேடைகள், பார்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் கவுன்ட்டர், 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் வரும் நேரங்களில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி பார்சல்கள், சரக்குகள் ஆகியவை பலத்த சோதனைக்கு பின்னரே ரயில் நிலையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டன. ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் உடமைகளும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்ட பிறகே எடுத்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.

இதுகுறித்து நாகப்பட்டினம் ரயில்வே போலீசார் கூறியதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தீவிர சோதனை நடத்தி வருகிறோம். ரயில் நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமாக நபர்கள் சுற்றி திரிந்தால் உடனடியாக அருகில் உள்ள ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். வேளாங்கண்ணி திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருப்பதால் நாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். எனவே கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்படும். சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினர்.

The post இயற்கை விவசாயத்தில் தூய்மை பணியாளர்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு: ரயில் நிலையத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Railway Station ,Nagapattinam ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...