×

ஆப்கானின் பட்டினியை போக்க 8,843 கோடி நன்கொடை: உங்களை வெளியே விட்டதற்கு எங்களுக்கு நன்றி சொல்லுங்க!: அமெரிக்காவை எச்சரிக்கும் தலிபான் வெளியுறவு அமைச்சர்

காபூல்: ஆப்கான் மக்களின் வறுமை, பட்டினியை போக்க ரூ. 8,843 கோடியை உலக நாடுகள் ஐ.நா மூலம் வழங்க உள்ளது. அமெரிக்க படைகளை வெளியே விட்டதற்கு, அவர்கள் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தலிபான் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். கடந்த ஆக. 15ம் தேதி ஆப்கானிஸ்தான் அரசு நிர்வாகத்தை தலிபான்  தீவிரவாதிகள் கைப்பற்றியதால், அமெரிக்க பெடரல் ரிசர்வ், சர்வதேச நாணய  நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை அந்த நாட்டிற்கான நிதிஉதவியை  துண்டித்துவிட்டன. தற்காலிகமாக புதிய அமைச்சரவையை அறிவித்த தலிபான்கள்,  தங்களது சித்தாந்தங்களை மக்கள் மீது திணித்து வருகிறார்களே தவிர, மக்களின்  அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை. இதனால், ஒட்டுமொத்த நாடே  பெரும் ெபாருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வறுமையும்,  பட்டினியும் வாட்டி வதைக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர்  அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் மக்கள் ஒட்டுமொத்த  பொருளாதா சரிவை எதிர்கொண்டுள்ளனர். ஆப்கானில் வசிக்கும் பாதிக்கும் மேலான  மக்கள் அல்லது சுமார் 18 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலர் கூட  சம்பாதிக்க முடியாதவர்களாக உள்ளனர். மக்களுக்கான உணவு விநியோகம்  துண்டிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. கணக்கெடுக்கின்படி, 5 வயதிற்குட்பட்ட  ஆப்கானிய குழந்தைகளில் பாதிப்பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய தலிபான் அமைச்சரவையில் உள்ள வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முடாகி, ‘அமெரிக்கா படைகள் ஆப்கானை வெளியே அனுமதித்த தலிபான்களுக்கு அவர்கள் (அமெரிக்க நிர்வாகம்) எங்களை பாராட்ட வேண்டும். அமெரிக்கா ஒரு பெரிய நாடு; ஆப்கான் மக்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்கு பெரிய இதயம் (மனம்) வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் 1.2 பில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாயில் 8,843 கோடி) நன்கொடை நிதி வழங்கவுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது. அமெரிக்காவிலிருந்து சுமார் 64 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 471 கோடி) நிதி வந்துள்ளது. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உலகம் நாடுகள் கொடுக்கும் அனைத்து உதவிகளையும் பெற தயாராக உள்ளோம். நாங்கள் அமெரிக்காவின் கடைசி நபர் பாதுகாப்பாக வெளியேறும் வரை உதவினோம். ஆனால் துரதிருஷ்டவசமாக, எங்களுக்கு நன்றி கூற வேண்டிய அமெரிக்கா, எங்களது சொத்துக்களை முடக்கி உள்ளது. நாட்டில் வறுமையைப் போக்கவும், ஊழல் இல்லாமல் முழு நிதியையும் பயன்படுத்த உள்ளோம். எங்களது ‘இஸ்லாமிய எமிரேட்’ அரசானது, உலக நாடுகள் அளிக்கும் உதவியை வெளிப்படையான முறையில் தேவைப்படும் மக்களுக்கு எங்களால் முடிந்த வரை வழங்குவோம்’ என்றார்.”மனிதாபிமான விமானங்கள்”ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தற்காலிக அரசு அமைந்த நிலையில், அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஐ.நா அமைப்பின் உலக உணவு திட்டம் செய்து வருகிறது. இதற்காக மனிதாபிமான விமானங்கள் காபூலுக்கு சென்று வருகின்றன. இதுகுறித்து ஜெனீவாவில் உலக உணவு திட்ட அதிகாரி டோம்சன் பிரி கூறுகையில், ‘ஆப்கானில் 90 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றன. குளிர்காலம் வேகமாக நெருங்கி வரும்நிலையில், முடிந்தளவு உதவிகளை செய்து வருகிறோம். எங்களது மனிதாபிமான விமான சேவை (யு.என்.எச்.ஏ.எஸ்) கடந்த 3 நாட்களில் மூன்று சரக்கு விமானங்கள் சென்றன. உலக சுகாதார அமைப்பின் சார்பாக மருத்துவ பொருட்களும், உணவு பொருட்களும் அதில் கொண்டு செல்லப்பட்டன. ஆப்கானுக்கு உணவு பொருட்களை கொண்டு செல்ல, பாகிஸ்தான் விமான தளம் மூலம் ஆப்கானிய நகரங்களான மசார்-இ-ஷெரீப், கந்தஹார், ஹெராத் நகரங்களை பயன்படுத்தி வருகிறோம்’ என்றார். ”இந்திய தொழிலதிபர் கடத்தல்? ”இந்திய தொழிலதிபர் அன்சாரி லால் என்பவர் காபூலில் தங்கியிருந்து தொழில் நடத்தி வருகிறார். அவர் நேற்று தனது அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவரை துப்பாக்கி முனையில் மடக்கிய கும்பல், அவரை அங்கிருந்து கடத்திச் சென்றது. காரின் பின்னால் இருந்து அன்சாரி லால் தாக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து தகவலறிந்த தலிபான்கள், கார் சென்ற வழியை மூடிவிட்டு சோதனைகளை நடத்தினர். ஆனால், தொழிலதிபர் குறித்து எந்த தகவல்களும் தலிபான்களுக்கு கிடைக்கவில்லை. அன்சாரி லால் பணம் வைத்திருந்ததால், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன….

The post ஆப்கானின் பட்டினியை போக்க 8,843 கோடி நன்கொடை: உங்களை வெளியே விட்டதற்கு எங்களுக்கு நன்றி சொல்லுங்க!: அமெரிக்காவை எச்சரிக்கும் தலிபான் வெளியுறவு அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Taliban ,minister ,US ,Kabul ,UN.… ,Afghanistan ,foreign minister ,America ,
× RELATED கலிஃபோர்னியா மாகாணத்தில் பரவிவரும் பயங்கர காட்டுத் தீ..!!