×

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்

அரியலூர், ஏப்.23: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், நேற்று நடைபெற்ற மாநாட்டுக்கு நிர்வாகிகள் சிவக்குமார், நல்லம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் செங்கோடன் கொடியை ஏற்றி வைத்து, உரையாற்றினார். மாவட்டச் செயலர் ராமநாதன், மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். ஒன்றியச் செயலர் பாண்டியன் வேலைகள் அறிக்கையை வாசித்தார். முன்னாள் மாவட்ட துணைச் செயலர் தண்டபாணி மக்களின் கோரிக்கைகளின் தீர்மானங்களை விளக்கிப் பேசினார். மாவட்டத் துணைச் செயலர் கலியபெருமாள், திருமானூர் முன்னாள் ஒன்றிய செயலர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில், ஒன்றியச் செயலாளராக பாண்டியன், துணைச் செயலாளர்களாக சிவக்குமார், கோவிந்தசாமி, பொருளாளராக மணி மற்றும் 17 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒன்றிய மாநாட்டில் அரியலூரில் சிமென்ட் ஆலைகளால் விவசாயம் அழிந்துள்ள நிலையில், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் பொருட்டு, சிமென்ட் மூலப்பொருள் சார்ந்த குழாய்கள், ஆஸ் பெஸ்டால் சீட் உற்பத்தி, சவுக்கு சார்ந்த காகிதக் கூழ் தொழிற்சாலை, ஜவ்வரிசி ஆலை போன்ற புதிய தொழிற்சாலைகளை தொடங்கிட அரசு முன்வரவேண்டும்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாரடைப்பு, பாம்பு கடி, விஷம் குடித்தல், தலையில் அடிபட்டு மூளை பாதிப்பு என உயிர் காக்கும் மருத்துவம் அளிக்கக சிறப்பு மருத்துவர்களை உடனடியாக நியமித்திட வேண்டும். நீர்வரத்து வாய்க்கால், ஏரி, குளம், குட்டைகளை சீர்படுத்தி ஆழப்படுத்த வேண்டும். அரியலூர் நகர மக்களுக்கு சீரான குடிநீர், பொது சுகாதாரம் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ariyalur Government Medical College Hospital ,Ariyalur ,Communist Party of India Union Conference ,Ariyalur… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...