×

விம்பிள்டனில் பரபரப்பு!

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கால் இறுதி மற்றும் அரை இறுதி ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அமைந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளன.பெடரர் - ஆண்டர்சன், நடால் - டெல்போட்ரோ மோதிய கால் இறுதி ஆட்டங்கள் 5 செட் வரை இழுபறியாக நீடித்த நிலையில், ஆண்டர்சன் மற்றும் நடால் இருவரும் 4 மணி நேரத்துக்கு மேலாகப் போராடி வென்றனர். இந்த நிலையில், நேற்று நடந்த முதல் அரை இறுதியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் - ஜான் ஐஸ்னர் (அமெரிக்கா) மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றியதுடன், 5வது மற்றும் கடைசி செட்டிலும் விடாப்பிடியாகப் போராடி ரசிகர்களை மகிழ்வித்தனர். 2வது அரை இறுதியில் நட்சத்திர வீரர்கள் நடால் - ஜோகோவிச் மோதியதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் எகிறியது.

* வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் நடந்த 2வது டெஸ்டில் (4 நாள், அதிகாரப்பூர்வமற்றது), இந்தியா ஏ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் ஏ 302 & 210; இந்தியா ஏ 192 & 321/5 (கேப்டன் கருண் நாயர் 55, ஹனுமா விஹாரி 68, ரிஷப் பன்ட் 67*, ஜெயந்த் யாதவ் 23*).
* தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். கால் இறுதியில் மலேசியாவின் சோனியா செயாவுடன் நேற்று மோதிய சிந்து 21-17, 21-13 என்ற நேர் செட்களில் வென்றார்.

* காலே நகரில் இலங்கைக்கு எதிராக நடக்கும் முதல் டெஸ்டில், தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் டு பிளெஸ்ஸி அதிகபட்சமாக 49 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இலங்கை பந்துவீச்சில் தில்ருவன் 4, லக்மல் 3, ஹெராத் 2, சந்தகன் 1 விக்கெட் வீழ்த்தினர். முன்னதாக முதல் இன்னிங்சில் 287 ரன் எடுத்திருந்த இலங்கை, 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஈஸ்வரன் 191, ஜுரெல் 93 இதர இந்தியா 416 ரன்...