×

அக்னி நட்சத்திர நிறைவுக்காக 1008 கலசபூஜை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

 

 

திருவண்ணாமலை, மே 27: அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளையுடன் நிறைவடைகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் 1008 கலச பூஜை நேற்று நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் அதிகரித்தது. கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் நாளையுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரத்தின் தொடக்கத்தில் 105 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. ஆனாலும், அடுத்தடுத்து பெய்த கோடை மழையால், படிப்படியாக வெயிலின் தாக்கம் தணிந்தது.

இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி நட்சத்திர பரிகார நிவர்த்தியாக திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4ம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது.
அதையொட்டி, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சுவாமி சன்னதி கருவறையில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர், இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் சிந்தியடி குளிர்விக்கப்படுகிறது.

இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நாளையுடன் (28ம் தேதி) நிறைவடைகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரவு 7 மணியளவில் முதல் காலம் 1008 கலச பூஜை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, இன்று காலை 8.30 மணிக்கு 2வது கால கலச பூஜையும், மாலை 6.30 மணிக்கு 3வது கால கலச பூஜையும், நாளை காலை 7 மணிக்கு 4வது கால கலசபூஜையும் நடைபெறும். பின்னர், பகல் 11 மணிக்கு உச்சிகால பூஜையில் அண்ணாமலையாருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திர நிறைவாக, நாளை இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெறும்.

அக்னி நட்சத்திரத்தில் வெயில் தணிந்துள்ளதால், அண்ணாமலையார் கோயிலில் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், திருவண்ணாமலையில் வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதால், பெரும்பாலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, திருவண்ணாமலை அறிவொளி பூங்காவில் இருந்து பெரியார் சிலை சந்திப்பு வரையும், சன்னதி தெரு, சின்னக்கடை தெரு, கடலைக் கடை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டது.

The post அக்னி நட்சத்திர நிறைவுக்காக 1008 கலசபூஜை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Tags : Agni Nakshatra ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Kathiri ,Veil ,1008th Kalasa Pooja ,Tiruvannamalai district ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...