மேட்டூர்: கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் அளவு 27 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை, கடந்த 2 மாதமாக வழக்கமான அளவு பெய்யவில்லை. இதனால், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளிலும் நீர்மட்டம் குறைவாக இருந்தது. இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை, கர்நாடக அரசு திறக்கவில்லை.
இது குறித்து தமிழக அரசு கடந்த 28ம் தேதி, காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முறையிட்டதை அடுத்து, 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்த மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி நீரை திறந்து விடுமாறு உத்தரவிட்டது. ஆனாலும், தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு தெரிவித்தது. காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில், தமிழகம்-கர்நாடகா இடையே மோதல் முற்றி வந்த நிலையில், கடந்த 31ம் தேதி முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி, கர்நாடக மாநிலம் வயநாட்டில், கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு தொடங்கி விடிய, விடிய பலத்த மழை கொட்டியதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து மளமளவென அதிகரித்தது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம், நேற்று முன்தினம் பிற்பகல் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணை உடையாமல் இருக்கவும், மக்கள் வெள்ளத்தில் சிக்காமல் இருக்கவும் கபினி அணையில் இருந்து உபரி நீரை திறந்து விட கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த அணையில் இருந்து, நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.
இரவில் 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று 25ஆயிரம் கன அடியாக இருந்த நீர்த்திறப்பு இன்று 27ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 84 அடியுடைய கபினி அணையின் இன்றைய நீர்மட்டம் 82.59 அடியாக உள்ளது
