உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் ஊராட்சிக்குட்பட்ட சவச்சவாக்கம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு அப்பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கோடை வெயில் காரணமாக கடந்த 2 மாதங்களாக கிணற்றில் தண்ணீர் வற்றியது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பக்கத்து கிராமங்களுக்கு சுமார் 3 கிமீ தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளானார்கள். எனவே குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர், வெவ்வேறு இடங்களில் இருந்து எடுத்து வரப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், எவ்வளவு நாட்களுக்குத்தான் இந்த நிலை நீடிக்கும். எனவே கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
