வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் வர்த்தக கப்பல்களுக்கு 20% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்ப பெற்று உள்ளார். இதற்கு பதிலாக வளைகுடா நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளதாக டிரம்ப் அறிவித்து உள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் வர்த்தக கப்பல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கான அமெரிக்காவின் செலவினங்களை ஈடுசெய்ய சரக்கு மதிப்பில் 20% கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். சர்வதேச அளவில் இந்த டிரம்ப்பின் இந்த அறிவிப்பு பெரும் விவாதங்களையும், கப்பல் போக்குவரத்து நிறுவனங்களிடையே கவலையையும் ஏற்படுத்தியது. சர்வதேச சட்டங்களுக்கு முரணான இந்த அறிவிப்புக்கு உலக நாடுகள் தரப்பில் எதிர்ப்புகளும் எழுந்தன.
ஈரான் தரப்போ ஹோர்முஸ் நீரிணையின் உண்மையான பாதுகாவலர்கள் நாங்கள் தான், அமெரிக்கா போல் நாங்கள் இல்லை, நியாயமான கட்டணம் வசூலிப்போம் என்று கூறியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாட்டுத் தலைவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த 20% கட்டணத் திட்டத்தை தான் கைவிடுவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார். மேலும், ஹோர்முஸ் நீரிணை ஈரான் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கும் தொடர்ந்து திறந்திருக்கும் என்றும், ஈரானிய கப்பல்களுக்கு எதிரான முழுமையான முடக்கம் தொடரும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது பதற்றத்தை நீடிக்க செய்துள்ளது.
