×

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் எதிரொலி; ஒரேநாளில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரிப்பு: மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

சேலம்: ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று ஒரேநாளில் 8 டாலர், அதாவது 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ராணுவம், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடுத்தது. தொடர் தாக்குதல் நடத்தியநிலையில், ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இப்போரின் காரணமாக சவூதிஅரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து நிறைந்த ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடியது.

இதன்காரணமாக கச்சா எண்ணெய் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 110 டாலர் வரை சென்றது. 3 மாதங்கள், கடுமையான விலை உயர்வு இருந்தநிலையில், கடந்த மாதம் ஈரோன்-அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தி திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியே எண்ணெய் கப்பல்கள் வந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் பீப்பாய் 68 டாலர் என்ற நிலைக்கு குறைந்து வந்தது.

கச்சா எண்ணெய் குறைந்தது மற்றும் இந்திய எண்ணெய் கப்பல்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக இம்மாத துவக்கத்தில் வர்த்தக சிலிண்டர்கள் விநியோகத்தில் இருந்த கட்டுப்பாடுகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விடுவித்தன. மேலும் வர்த்தக சிலிண்டர் விலையையும் ரூ.172 குறைக்கப்பட்டது. அதேவேளையில், பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை குறைக்காமல் நிலையாக வைத்துக்கொண்டனர். கடந்த 3 மாதமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுபட்ட, விலை குறைப்பு நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த வணிக கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியது. இதனால், அமெரிக்கா மீண்டும் தனது தாக்குதலை ஈரான் மீது தொடுத்தது. இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக அறிவித்தது. அவ்வழியே வரும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் எச்சரித்துள்ளது. இதனால், ஓமன் கடல் பரப்பில், இந்திய எண்ணெய் கப்பல்கள் உள்பட பல்வேறு நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் வர்த்தகம் மீண்டும் பழையபடி பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விறுவிறுவென உயரத்துவங்கியுள்ளது. நேற்று சர்வதேச சந்தையில் பிராண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 77 டாலராக இருந்தது. இதுவே இன்று காலை பீப்பாய் 85 டாலராக அதிகரித்தது. ஒரேநாளில் 8 டாலர், அதாவது 9.62 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ., கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் ஒரேநாளில் 9.4 சதவீதம் அதிகரித்து, 80 டாலராக உயர்ந்துள்ளது. இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு வரும் நாட்களில் இன்னும் அதிகரித்து 100 டாலருக்கு மேல் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.107.77க்கும், டீசல் ரூ.99.55க்கும், சேலத்தில் பெட்ரோல் ரூ.108.60க்கும், டீசல் ரூ.100.43க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Iran ,Strait of Hormuz ,Salem ,India ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூலை 17, 18, 19...