சென்னை: நாகர்கோவிலில் கடையில் 200 கிராம் குட்கா வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர், சிறையில் மரணம் அடைந்தது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் 200 கிராம் குட்கா வைத்திருந்த இளைஞரை காவல்துறை கைது செய்த நிலையில், குட்கா ஊழலில் தொடர்புடைய முன்னாள் அமைச்சரையே நீங்கள் உங்கள் கட்சியில் சேர்த்து அருகில் வைத்துள்ளீர்கள் என முதல்வர் விஜய்யை சாடினார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணத்தின் போது, நடந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது “சாரி வேண்டாம் சார்.. எங்களுக்கு நீதி வேண்டும்” என விஜய் சொன்னார். இன்று முதல்வராக விஜய் தான் இருக்கிறார், ஆனால் இந்த சம்பவத்தை கண்டும் காணாதது போல் இருக்கிறார், இது நியாயமா என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் பரந்தாமன்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த விவகாரத்தில் ‘ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்’ என மக்கள் முதல்வரை பார்த்து கேட்கின்றனர். உண்மையை சொல்வதென்றால் திரைப்படத்தில் வேண்டுமென்றால் அவர் பெரிய ஹீரோவாக இருக்கலாம், ஆனால் ஆட்சியில் ஜீரோவாகவே உள்ளார் விஜய். தற்போது நிகழ்ந்துள்ள நாகர்கோவில் சிறை மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி நீதிமன்றத்தை அணுக திமுக தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
