×

பிரபல பாடகி எஸ்.ஜானகியின் உடலுக்கு கர்நாடக அரசு முழு மரியாதை: 30 குண்டுகள் முழங்க இறுதிச்சடங்கு மைசூருவில் நடந்தது

சென்னை: ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்ற புகழுக்குரிய பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88), உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக, நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் மைசூருவில் காலமானார். அவரது பேரிழப்பு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. பல்வேறு மொழிகளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் எஸ்.ஜானகி, நிறைய பாடல்களை தானே எழுதி இசை அமைத்து பாடியுள்ளார். மேலும், சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை 4 முறை பெற்றுள்ளார்.

தனக்கு தாமதமாக வழங்கப்படுவதாக சொல்லி, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை வாங்க அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில், பாடகி எஸ்.ஜானகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மைசூருவில் தகனம் செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்து இருந்தார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மெல்லிசை ராணி எஸ்.ஜானகியின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும்.

கர்நாடக அரசு சார்பில் இறுதிச்சடங்கில் பங்கேற்க, அமைச்சர் டாக்டர் யதீந்திர சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார். தனது அற்புதமான குரலால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற அந்த மாபெரும் பாடகிக்கு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த அரசு முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 5.30 மணியளவில், மைசூரு எச்.டி.கோட்டை சாலையில் அமைந்துள்ள கனியனஹுந்தியில் இருக்கும் பண்ணை இல்லத்தில், எஸ்.ஜானகியின் உடல் கர்நாடக அரசு முழு மரியாதையுடன், 30 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக கர்நாடக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எஸ்.ஜானகியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். குடும்பத்தினர், உறவினர்கள், தமிழ் திரையுலகை சேர்ந்த பாடகர், பாடகிகள் பலர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி, எஸ்.ஜானகியின் உடலுக்கு பிரியாவிடை கொடுத்தனர். பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி அம்மாவின் மறைவு, இசை மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

பல்வேறு மொழிகளில் அவர் பாடியுள்ள பாடல்கள், தலைமுறைகளை கடந்து மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவை. இணையற்ற நளினத்துடனும், பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்வுக்கும் அவை குரல் கொடுத்தன. அவரது இனிமையான பாடல்கள், இனி வரவிருக்கும் ஆண்டுகளிலும் கேட்போரை தொடர்ந்து வசீகரிக்கும். இந்த துயரமான வேளையில், அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த இசையுலகினருக்கும் எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவால், இந்தியா ஒரு இசை சின்னத்தை இழந்துள்ளது. அவரது அபாரமான குரல் வளம் பல தலைமுறையினரை மெய்சிலிர்க்க வைத்தது. ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது சிறப்பான இசைப்பயணத்தில் இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி, பெங்காலி உள்பட சுமார் 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். காலத்தால் அழியாத அவரது இசை என்றும் மதிப்புமிக்கதாக திகழும்.

அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், ‘பெருமதிப்பிற்குரிய பாடகி ஜானகி அம்மா காலமான செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தேன். இது எனக்கு மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக இருந்தது. அவரது சொந்த வாழ்வில், தாங்க முடியாத பல துக்கங்களை, தாங்க முடியாத நிகழ்வுகளை தாங்கி வாழ்ந்தார் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

உலக இசை அமைப்பாளர்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் துக்கமானதாகவே இருந்திருக்கிறது. ஆனால், ஜானகி அம்மா தன்னுடைய திறமையில் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை ஒவ்வொரு பாடலிலும் நிரூபித்துக்கொண்டே வந்துள்ளார். மிகவும் கடினமான உழைப்பாளி அவர். நான் ஒரு பாடலை உருவாக்குவதற்கு ஒவ்வொரு வாத்தியத்தையும் எவ்வளவு அக்கறையோடு சேர்ந்து அதில் விடாப்பிடியாக நான் நினைப்பதை வரவழைப்பேனோ, அதுபோல் அவருக்கு சொல்லிக் கொடுக்கும் பாடலை விடாப்பிடியாக என்னுடைய கடின உழைப்புக்கு சமமான கடின உழைப்பை கொடுக்கக்கூடியவர்.

சிறந்த கம்போசர், சிறந்த பஜன் பாடல்களை நிறைய எழுதியிருக்கிறார். அவரது இழப்பு இந்திய திரைப்பட சங்கீத உலகிற்கு ஒரு பெரிய இழப்பு. அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். பாடகி பி.சுசீலா வெளியிட்டுள்ள வீடியோவில், ‘எனது வாழ்க்கையில் இது ஒரு மிகவும் ஆழமான, துயரமான நாள். இசைத்துறையில் ஒரு புகழ்பெற்ற சக கலைஞர் என்பதை தாண்டி, எனது உண்மையான தோழியும், சகோதரியுமான எஸ்.ஜானகியை இழந்துவிட்டேன்.

இசைத்துறையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஒன்றாக கழித்த நாங்கள், பல மொழிகளில் எண்ணற்ற மெல்லிசை பாடல்களையும், அழகான மற்றும் வாழ்நாள் முழுவதுமான ஒரு பந்தத்தையும் பகிர்ந்துகொண்டோம். அவரது பிரிவு இசையுலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது அன்பிற்குரிய ஜானகி, நீ லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்வாய்’ என்று பேசியுள்ளார்.

மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பு, சிம்ரன், திரிஷா, கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், டி.ராஜேந்தர் உள்பட பலர் தங்கள் இரங்கல் செய்தியை வெளியிட்டு இருந்தனர். பாடகர்கள் மனோ, கே.எஸ்.சித்ரா, சுஜாதா மோகன், விஜய் பிரகாஷ் உள்பட பலர் நேரில் சென்று, எஸ்.ஜானகியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், எஸ்.ஜானகியின் சாதனைகளை நினைவுகூறும் வகையில், மைசூருவில் அவருக்கு ஒரு நினைவகம் அமைக்க வேண்டும் என்று, கன்னட இசை அமைப்பாளர் ஹம்சலேகா, கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Karnataka government ,Janaki ,Mysore ,Chennai ,S. Janaki ,
× RELATED வணிகக் கப்பல் மீது ஈரான் நடத்திய...