×

வானகரத்திற்கு பைக்கில் சென்றபோது விபத்து: லாரி மோதி படுகாயம் அடைந்த தாய், மகனை மீட்ட கனிமொழி எம்பி

 

பூந்தமல்லி: வானகரத்தில் பைக் மீது லாரி மோதியதில் தாய், மகன் படுகாயம் அடைந்தனர். அப்போது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்த கனிமொழி எம்பி மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். ஆனால், வாலிபர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகன் ரித்திஷ் குமார் (18). இவர் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக ரித்திஷ்குமார் தனது தாய் சுந்தரியை அழைத்துக் கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம் அருகே மீன் மார்க்கெட் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது கோயம்பேட்டில் இருந்து வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது திமுக தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. திருவேற்காட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த விபத்தை பார்த்ததும் கனிமொழி ஒரு நொடி கூட தாமதிக்காமல் தனது வாகனத்தை நிறுத்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தார். லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினருடன் இணைந்து செய்தார்.

அதே நேரத்தில், தன்னுடன் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வந்த தமிழன் பிரசன்னாவின் வாகனம் பின்னால் வந்து கொண்டிருந்ததை கவனித்த கனிமொழி, அந்த வாகனத்தை நிறுத்தச் சொல்லி, அதன் ஓட்டுநரிடம் பலத்த காயமடைந்திருந்த அந்த வாலிபரின் தாயை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்தில் சிக்கிய இருவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதை உறுதி செய்த பின்னரே கனிமொழி அங்கிருந்து திருமண நிகழ்ச்சிக்குச் சென்றார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரித்திஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன ரித்திஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சக்திவேல் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மீன் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதியதில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Poonthamalli ,Kanimozhi ,Madurawal ,
× RELATED கடலில் பலத்த காற்றால் மீனவர்கள்...