மதுரை: சிறை உளவியலாளர் மற்றும் நல அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை 6 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் சிறை வெறும் காவலடைப்பு முறையாக மட்டுமல்லாமல் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வை மையமாக கொண்ட நவீன அமைப்பாக மாற்றுவதை நோக்கமாய் கொண்டுள்ளது என்றும் இந்நிலையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய அலுவலர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளது என்று தெரிவித்து மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இதனை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் கொண்ட அமர்வு சிறை உளவியலாளர் உள்ளிட்ட பணிகள் 6 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளிலும் உளவியலாளர் (Psychologist) மற்றும் நல அலுவலர் (Welfare Officer) பணியிடங்கள் மிக அவசியமானவை என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிறை கைதிகளின் மனப்போராட்டம், தற்கொலை எண்ணம் மற்றும் குடும்பக் கவலைகளைக் களைந்து அவர்களை நல்வழிப்படுத்த இப்பணியிடங்கள் மிகவும் அவசியமானது.
சீர்திருத்தப் பணி, பயிற்சி, நவீனமயமாக்கலுக்கான கண்காணிப்பாளர் பணிக்கு தொழில்நுட்ப அறிவு தேவை இப்பணியிடங்கள் கட்டாயமானவை இல்லை என்றாலும் அரசு அந்த பணியிடங்களை நிரப்ப முயற்சிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சிறைத்துறை தலைமையகத்தில் சீர்திருத்தப் பணிகளுக்கான கண்காணிப்பாளர், பயிற்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கான கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இப்பணியிடங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் முறையாக நிரப்புமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
