- யூனியன் அரசு
- மெட்டா
- தில்லி
- ஒன்றிய இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு
- படவரி
- பிபிசி
- முகநூல்…
டெல்லி: இன்ஸ்டாகிராம் பக்கங்களில் குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பான விளம்பரங்கள் வெளியானது குறித்து, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் பிபிசி ஊடகம் நடத்திய ஆய்வில், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் ஆபத்தான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடும்போது, சட்டவிரோத டெலிகிராம் சேனல்களுக்குக் கூட்டிச் செல்லும் விளம்பரங்கள் காட்டப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. இதன் பின்னணியில், குழந்தை வன்கொடுமைக்கு எங்கள் தளத்தில் எப்போதுமே இடமில்லை என்று மெட்டா நிறுவனம் பதிலளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மிகவும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. குழந்தை வன்கொடுமை தொடர்பான அனைத்து உள்ளடக்கங்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இதுகுறித்து ஏழு நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மெட்டா நிறுவனத்திற்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய மோசமான பதிவுகளைப் பயனர்களுக்குத் தானாகவே கொண்டு சேர்க்கும் தொழில்நுட்ப முறையை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த நோட்டீஸிற்கு உரிய விளக்கம் தராவிட்டால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.
