×

எத்தனை எத்தனை புனிதத் தீர்த்தங்கள் நம் தெய்வத் திருநாட்டில்

அனந்தன் ஏற்படுத்திய தீர்த்தங்கள்

காஞ்சிபுரம்ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள குளம் அனந்தசரஸ் குளம் (அனந்த சரஸ் தீர்த்தம்),மகாவிஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷன் (அனந்தன்), பெருமாளை நோக்கி இத்தலத்தில் கடும் தவம் புரிந்தார். அவனது தவத்திற்கு மெச்சி பெருமாள் காட்சியளித்ததால், இந்தத் தீர்த்தம் ‘அனந்தசரஸ்’ என்று பெயர் பெற்றது. இக்குளத்தில் நீராடினால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

இக்குளத்தின் மையப்பகுதியில் நீராழி மண்டபம் அமைந்துள்ளது. நாம் வெளியில் இருந்து பார்க்கும்போது சாதாரண மண்டபமாகத் தெரியும் இதன் கீழே, இரண்டு நிலத்தடி அறைகள் உள்ளன. குளத்து நீர் முழுவதும் வற்றினாலும், இந்த நிலத்தடி அறைகளுக்குள் எப்போதும் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கும் வகையில் பழங்காலத் தொழில்நுட்பத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்தின் அடிமட்டத்தில் உள்ள ஒரு அறையில்தான் ஒன்பது அடி நீளமுள்ள அத்தி மரத்தாலான ‘அத்தி வரதர்’ மூலவர் விக்கிரகம், ஒரு வெள்ளிப் பெட்டகத்திற்குள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, கி.பி. 16-17 ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் அந்நிய படையெடுப்பு அச்சுறுத்தல் அதிகமாக இருந்தது.அப்போது கோவிலின் முக்கிய விக்கிரகங்களைப் பாதுகாப்பதற்காக, இங்கிருந்த அத்திவரதர் விக்கிரகத்தை ரகசியமாக இந்த அனந்தசரஸ் குளத்தின் அடியில் உள்ள அறையில் மறைத்து வைத்தனர். அதன்பிறகு, நீண்ட காலம் கழித்து நிலைமை சீரானபோது, மூலவரைத் தேடிய விபரம் தெரிந்த அர்ச்சகர்கள் யாரும் உயிருடன் இல்லை. பிற்காலத்தில் குளத்தை முழுமையாகத் தூர்வாரும்போதுதான் அத்திவரதர் சிலை அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் கோவிலில் தற்போதிருக்கும் கல் விக்கிரகம் (தேவராஜ பெருமாள்) பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டதால், ‘‘ஆதி மூலவரான அத்தி வரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுத்து 48 நாட்கள் மட்டும் பூஜிப்பது” என்ற ஐதீகம் உருவாக்கப்பட்டது.

பொதுவாக மரத்தாலான சிலைகள் தண்ணீரில் இருந்தால் அழுகிவிடும். ஆனால், அத்தி மரம் தண்ணீரை உறிஞ்சி, மேலும் பலம் பெறக்கூடியத் தன்மை கொண்டது. குளத்து நீரில் உள்ள மூலிகைத் தன்மைகளும், அனந்தசரஸ் நீரின் தனித்துவமும் இந்த விக்கிரகம் பல நூற்றாண்டு களாகச் சிதையாமல் இருக்க உதவுகிறது.பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மைத் தொழில் நுட்பத்திற்கும், பக்தி நெறிக்கும் மிகச்சிறந்த சான்றாக விளங்கும் அனந்தசரஸ், இன்றும் காஞ்சிபுரத்தின் மிக உன்னதமான ஆன்மிக ரகசியங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

ஸ்வாமி ராமானுஜரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த சன்னியாச தீக்ஷை நிகழ்ந்தது இந்த அனந்தசரஸ் குளத்தின் கரையில்தான். இராமானுஜர் ஒரு குருவின் மூலம் சன்னியாசம் பெற விரும்பினாலும், பேரருளாளனான வரதராஜ பெருமாளையே தனது பிரதான குருவாகக் கருதினார். வரதனின் திருவருள் உந்துதலால், காஞ்சி அனந்தசரஸ் குளத்தின் கரைக்குச் சென்றார்.
இக்குளத்துத் தீர்த்தத்தில் நீராடி, தன் கர்ம வினைகளையும் உலக பந்தங்களையும் துறந்து, அனந்தசரஸ் கரையில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சந்நதிக்கு அருகில், வரதராஜ பெருமாளின் திருவடிகளையே தஞ்சமாக அடைந்து சன்னியாச ஆசிரமத்தை (துறவறத்தை) ஏற்றுக் கொண்டார்.

பெருமாளே நேரில் வந்து அவருக்கு முக்கோலும், காவி உடையும் அளித்து, துறவிகளின் அரசன் என்ற பொருள்படும் ‘‘யதிராஜர்” (யதி – துறவி, ராஜர் – அரசன்) என்ற திருநாமத்தைச் சூட்டி அருளினார் என்பது வைணவப் பாரம்பரிய வரலாறு. இதுதவிர சேஷ தீர்த்தங்கள் பல கோயில்களில் உண்டு. குறிப்பாக கடலூருக்கு அருகில் திருவஹீந்திரபுரத்தில் சேஷ தீர்த்தம் உண்டு. நன்னிலம் அருகே சிறுபுலியூர் என்ற திருத்தலத்தில் அனந்தசரஸ் உண்டு.

கருட தீர்த்தம்

ஆதிசேஷனைப் போலவே, கருடனும் பல திருத்தலங்களில், தீர்த்தங்களை உண்டாக்கி இருக்கிறார். குறிப்பாக, கடலூருக்கு அருகே திருவஹீந் திரபுரத்தில், கருடன் உண்டாக்கிய தீர்த்தம் தான் கருட நதியாக ஓடுகிறது. அதனை இப்போது கெடில நதி என்று சொல்கிறார்கள். மதுரை அழகர் கோவிலில் உள்ள கருட தீர்த்தத்தில் கருடனே நீராடி தனது பாவங்களைப் போக்கிய புனிதத் தலமாகப் போற்றப்படுகிறது. இது மலை உச்சியில் உள்ள தீர்த்த தொட்டிக்கு அருகில் அமைந்துள்ளது. திருப்பதியில் வெங்கடாசலபதி கோயிலுக்கு வலது பக்கத்தில் உள்ள தெப்பக்குளம் சுவாமி புஷ்கரணி எனப்படும். சுமார் 1.5 ஏக்கர் பரப்புள்ளது.

இந்த திருக்குளம் தமிழில் திருக்கோனேரி எனப்படுகிறது. இத்தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு தெய்வத்தன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த தீர்த்தத்துக்கு சுவாமி தீர்த்தம் என்றும் பெயர் உண்டு. இதை வைகுண்டத்தில் இருந்து கருட பகவான் கொண்டு வந்து, விஷ்ணு நீராடுவதற்காக நிறுவினார் என்று சொல்வர். இலங்கை செல்லும் வழியில் இந்த தீர்த்தத்தில் நீராடி சென்றுள்ளார் ராமன். இத்தீர்த்தத்தில் மார்கழி துவாதசி அன்று மூன்று கோடி பவித்ர தீர்த்தங்கள் கலப்பதாக ஐதீகம். அன்று காலை விஷ்ணுவின் சக்கரமான சுதர்சனம் திருவீதிகளில் எழுந்தருளும், அத்துடன் சுவாமி தீர்த்தத்தில் தீர்த்தவாரியும் நடக்கும்.

புண்டரீக புஷ்கரணி

‘புண்டரீக புஷ்கரணி’ என்ற பெயரில் பல தீர்த்தங்கள் உண்டு. புண்டரீகம் என்றால் ‘வெண்தாமரை’ என்று பொருள். புஷ்கரணி என்றால் புனிதக் குளம். வெண்தாமரைகள் நிறைந்து விளங்கியதால் இக்குளம் ‘புண்டரீக புஷ்கரணி’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகவே, புஷ்கரணியில் தாமரையும் அல்லியும் மலரும். தாமரை மலரின் பல்வேறு பெயர்களோடு பல தீர்த்தங்கள் உண்டு. பொற்றாமரைக்குளம் போலவே, பத்ம தீர்த்தம் (திருக்கண்டியூரில் உள்ளது) செங்கமலம் சரஸ் ,ஸ்ரீ வரமங்கையில் சேற்றுத் தாமரைத் தீர்த்தம் என்று பல்வேறு பெயர்களில் தீர்த்தங்கள் உண்டு.

சக்ர தீர்த்தம்

சக்கரத்தாழ்வார் ஏற்படுத்தியதாக பல தீர்த்தங்கள் உண்டு. மகாவிஷ்ணுவின் முதன்மை ஆயுதமும், பக்தர்களைக் காக்கும் பேரொளியுமான சுதர்சன ஆழ்வார் (சக்கரத்தாழ்வார்) பல தலங்களில் தனது சக்கரத்தினால் பூமியைக் கீறி, இந்தத் தீர்த்தங்களை உருவாக்கினார் என்பது ஆன்மிக வரலாறு. திருக்கோவலூரில் உள்ள தீர்த்தம் சக்கர தீர்த்தம். சாளக்கிராமத்தில் சக்கர தீர்த்தம் உண்டு இது தவிர திருக்கூடலூர், திருவித்துவக்கோடு, திருகடல்மல்லை, திருப்புல்லாணி, திரு பார்த்தன்பள்ளி, திருவெள்ளியங்குடி முதலிய தலங்களில் சக்கர தீர்த்தங்கள் உண்டு. சுக்கிரன் (வெள்ளி) ஒளியிழந்தபோது, திருவெள்ளியங்குடி சக்ரத்தீர்த்தத்தில் நீராடி, கோலவல்லி ராமனை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றார் என்பது வரலாறு.

ஜடாயு ஏற்படுத்திய தீர்த்தம்

ராமாயணத்தில் ஜடாயு ராவணனால் அடிபட்டு வீழ்கிறார். ராமரிடம் அந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்காக ஜடாயு உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறார். ராமரிடம் செய்தியைச் சொல்லிவிட்டு மாண்டு போகிறார். ராமன் ஜடாயுவுக்கு அந்திமக்கிரியை செய்த தீர்த்தம் ஜடாயு தீர்த்தம் என்று வழக்கப்படுகிறது. காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி திருத்தலத்தில் ஜடாயு தீர்த்தம் உள்ளது. கும்பகோணத்தில் இருக்கும் திருப்புள்ளம் பூதங்குடி திருத்தலத்திலும் ஜடாயு தீர்த்தம் உள்ளது. இந்த இரண்டு தலத்திலும் ஜடாயுவுக்கு ராமன் அந்திமக் கிரியை செய்த வரலாறு உள்ளது.

சங்க தீர்த்தம்

சக்ர தீர்த்தத்தைப் போலவே, மகாவிஷ்ணுவின் இடக்கையில் ஏந்தி யிருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் பெயரால் அமைந்த ‘சங்க தீர்த்தமும்’ வைணவத் திருத் தலங்களில் மிக உயரிய ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சங்கம் (சங்கு) ஞானத்தின் வடிவமாகவும், மங்கலத்தின் குறியீடாகவும் போற்றப்படுகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள ஐந்து தீர்த்தங்களில் ‘சங்க தீர்த்தம்’ மிகவும் பிரசித்தி பெற்றது. திருமலையில் சக்ர தீர்த்தம் போலவே சங்க தீர்த்தமும் ஒரு புனிதமான நீர்வீழ்ச்சி / தீர்த்தமாக அமைந்துள்ளது. மார்கழி மாத சுக்லபட்ச துவாதசி அன்று இந்த தீர்த்தத்தில் நீராடுவது கோடி மடங்கு புண்ணியத்தைத் தரும் என்பது ஐதீகம். சிவஸ்தலமான ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் சங்க தீர்த்தமும், சக்ர தீர்த்தமும் மிக முக்கியமானவை. திருமூழிக்களம், திருச்செங்குன்றம், திருப்பேரை, சீர்காழி முதலிய தலங்களில் சங்க தீர்த்தம் உண்டு.

இந்திர புஷ்கரணி

இந்திரன், வருணன், வாயு பகவான், அக்கினி ஆகியோர் ஏற்படுத்திய தீர்த்தங்கள் உண்டு. திருப்பேர்நகர், திருமணி மாடக்கோயில் முதலிய இடங்களில் இந்திர தீர்த்தங்கள் உண்டு. திரு மணிமாடக் கோயிலில் உள்ள இந்திர தீர்த்தக்கரையில்தான், தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் திவ்ய தேசத்தில் 11 கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சைவத் தலங்களிலும் இந்திர புஷ்கரணி உண்டு.

சீர்காழி திருத்தலத்தில் உள்ள பெரிய குளம் இந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது.விருத்திராசுரன் என்ற அசுரனுக்குப் பயந்து இந்திரன் இத்தலத்தில் மூங்கிலாக (வேணு) மாறி ஒளிந்து கொண்டு, இக்குளத்து நீரில் நீராடி சிவபெருமானை வழிபட்டான். இதனால் இத்தலத்திற்கு ‘வேணுபுரம்’ என்ற பெயரும், இக்குளத்திற்கு ‘இந்திர புஷ்கரணி’ என்ற பெயரும் வந்தன. இந்திரன் என்பது மனிதனின் ‘ஐம்புலன்களைக்’ (இந்திரியங்களை) குறிக்கும். ஐம்புலன்களின் வழியே ஏற்படும் ஆசைகளாலும், பிழைகளாலும் உண்டாகும் தோஷங்களை, இந்திர புஷ்கரணியில் நீராடுவதன் மூலம் போக்கிக் கொள்ளலாம்.

பாற்கடல்

பகவானுடைய ஐந்து நிலைகளில் ஒன்று திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நிலை. திருப்பாற்கடல் என்ற பெயரோடு திவ்யதேசங்கள் உண்டு. காஞ்சிபுரம் அருகே திருப்பாற்கடல் திருத்தலம் உள்ளது. பல திருத்தலங்களில் திருப்பாற்கடல் என்னும் பெயரோடு தீர்த்தங்கள் உள்ளன. வடமொழியில் ஷீர புஷ்கரணி என்பார்கள். திருக்குறுங்குடி, திருமோகூர், திருக்கோட்டியூர் தலங்களில் திருப்பாற்கடல் உண்டு.

இன்னும் சில

1. திருக்கண்ணபுரத்தில் தெப்ப உற்சவம் மிகவும் விசேஷம். அங்கே கோயிலுக்கு எதிரில் இருக்கக்கூடிய புஷ்கரணி நித்ய புஷ்கரணி என்ற பெயர்.

2.திருக்கண்ணமங்கை என்னும் திருத்தலத்திற்கு எதிரில் மிகப்பெரிய புஷ்கரணி உண்டு. அதற்கு கல்யாண புஷ்கரணி (தரிசன புஷ்கரணி) என்ற பெயர்.

3. உறையூர் கமலவல்லி நாச்சியார் சந்நதிக்குள் உள்ள தீர்த்தத்திற்கு கல்யாண தீர்த்தம் என்று பெயர்.

4. திருச்சிக்கு அருகே திருவெள்ளறை எனும் திருத்தலத்தில் மதிலுக்கு உள்ளே ஏழு தீர்த்தங்கள் உள்ளன. இங்கே இருக்கக்கூடிய மிக விசேஷமான தீர்த்தம் ஸ்வஸ்தி குளம். நான்கு திசைகளிலிருந்தும் நான்கு தனித்தனிப் படிக்கட்டுகள் குளத்தின் மையப்பகுதியை நோக்கி இறங்குமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மிக ஆச்சரியமான அம்சம் என்னவென்றால், ஒரு திசையிலிருந்து படிக்கட்டில் இறங்கி நீராடுபவர்களை, மற்ற மூன்று திசைகளில் உள்ள படிக்கட்டுகளில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. தமிழகக் கட்டடக்கலை மற்றும் நீர் மேலாண்மை வரலாற்றில் ஒரு மிக உன்னதமான, அரிய அதிசயமாய் விளங்கும் ஒரு வரலாற்றுச் சின்னமாகும்.

5. நான்முகன் பல தலங்களில் உற்சவங்களை ஏற்படுத்தியதாகவும், தீர்த்தங்களை ஏற்படுத்தியதாகவும் தல வரலாறுகள் கூறுகின்றன. அப்படி ஏற்படுத்திய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அவர் பெயராலேயே வழங்கப்படுகிறது. ஆழ்வார் திருநகரி தீர்த்தத்திற்கு பிரம்ம தீர்த்தம் என்று பெயர்.

6. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி சந்நதிக்கு வெளியிலே மிகப் பிரமாண்டமான திருக்குளம் உள்ளது. ‘‘ஹரித்ராநதி” தீர்த்தம் என்று பெயர் ஹரித்ரா என்றால் ‘மஞ்சள்’ என்று பொருள்.ஸ்தல புராணத்தின்படி, இறைவன் கிருஷ்ணர் (இங்கு ராஜகோபாலனாக எழுந்தருளியிருப்பவர்) துவாபர யுகத்தில் கோபியர்களுடன் விளையாடி மகிழ்ந்தபோது, அவர்கள் பூசியிருந்த மஞ்சள் இக்குளத்து நீரில் கரைந்து நதிபோல ஓடியதால், இதற்கு ‘ஹரித்ராநதி’ என்று பெயர் வந்தது. 23 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பிரமாண்டமான நீர்நிலை… இந்த திருக்குளத்தில் தான் தெப்ப உற்சவங்கள் நடைபெறும்.

பராசரன்

Tags : Anantha ,Ananthasaras ,Sri Varadaraja Perumal temple ,Kanchipuram ,Adiseshan ,Mahavishnu ,
× RELATED இந்த வார விசேஷங்கள்