×

பீகார், ம.பி., குஜராத்தில் 3 தொகுதிகளுக்கு தேதி அறிவிப்பு; தமிழ்நாட்டுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு இல்லை: குதிரைபேர புகாரால் தேர்தல் ஆணையம் நிறுத்திவைப்பு? கட்சி தாவிய, தாவ உள்ள எம்எல்ஏக்கள் கலக்கம்

புதுடெல்லி: பீகார், மத்திய பிரதேசம், குஜராத்தில் காலியாக உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 7 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பதவியை ராஜினாமா செய்தவர்களும், ராஜினாமா செய்ய திட்டமிட்டவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் பெரம்பூர் தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்ட அவர் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.

இதனால் தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியாக உள்ளன. 7 தொகுதிகள் காலியானது குறித்து சட்டப்பேரவை செயலகம் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் தெரிவித்தது. இதனால் எந்த நேரத்திலும் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதில் பீகார், மத்திய பிரதேசம், குஜராத்தில் காலியாக உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் பங்கிபூர் எம்எல்ஏவான நிதின் நபின் சமீபத்தில் பாஜ தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த தாடியா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மோசடி வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். குஜராத்தின் மன்சல்பூர் தொகுதி பாஜ எம்எல்ஏ யோகேஷ்பாய் நரந்தாஸ் படேல் காலமானதைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானது.

இந்த 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் ஜூலை 30ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்றும், அதில் பதிவான வாக்குகள் ஆகஸ்ட் 3ம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
ஆனால் 7 தொகுதிகள் காலியாக உள்ள தமிழ்நாட்டிற்கு மட்டும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரப்பூர்வமாக எந்த காரணத்தையும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.

வடமாநிலங்களில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இடைத்தேர்தலை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவு பல்வேறு குழப்பங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி விலைக்கு வாங்குவதாக எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் அர்லேக்கரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து ஏற்கனவே தலைமைச் செயலாளர் சாய்குமார், டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலிடம் ஆளுநர் விசாரித்துள்ளார். மேலும், கட்சி மாறி வாக்களித்த 4 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு தாவினர்.

இவர்கள் தங்கள் பதவியையும் ராஜினாமா செய்தனர். ஆனால் முதலில் அவர்கள் கட்சி மாறி வாக்களித்ததால், அதன் மீது நடவடிக்கை எடுத்த பிறகுதான் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும், திமுக உறுப்பினர்களாக உள்ள 2 எம்எல்ஏக்களையும் குதிரைபேரம் மூலம் வாங்க முயன்றதாக ஆளுநரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவினர் ராஜினாமாவால் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் அக்கட்சிகளின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் கைவிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் மெஜாரிட்டிக்கு 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது அக்கட்சிக்கு காங்கிரஸ் (5), விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனால் 8 உறுப்பினர்கள் அவர்களுக்கு உள்ளனர். அமமுக ஒரு உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளார். மொத்தமாக கூட்டணிக் கட்சிகள் மூலம் 14 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால் அக்கட்சிக்கு 121 பேரின் ஆதரவு உள்ளது.
தற்போது உள்ள நிலையில், தமிழகத்தில் 227 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. அதில் மெஜாரிட்டிக்கு 114 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது. ஆனால் கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்களையும் சேர்த்து, 121 உள்ளதால், மெஜாரிட்டிக்கு தேவையான பலம் தவெக கூட்டணிக்கு உள்ளது.

இதனால் இந்த 7 தொகுதிகளில் தேர்தல் நடந்தாலும், நடக்காவிட்டாலும், தவெக அரசு தொடரும் நிலை உள்ளது. இதனால் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய தவெக தரப்பில் இருந்து எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. எந்த முயற்சியும் மேற்கொள்ளப்போவதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்தும் எண்ணத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தேர்தல் நடைபெறாவிட்டால் அந்த தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பது கஷ்டம். அதேநேரத்தில் அமைச்சர் பதவி மற்றும் சில, பல தேவைகளுக்கு ஆசைப்பட்டு சென்ற அதிமுகவினர்தான் அச்சத்திலும், பீதியிலும் உள்ளனர். தேர்தல் நடைபெறாவிட்டால், தங்களின் கனவு வீணாகிவிடுமே என்று ஏக்கத்திலும் உள்ளனர். அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும், ஆளும் கட்சி எம்எல்ஏ என்ற அந்தஸ்தாவது கிடைக்கும்,

அதிகாரிகளிடம் மரியாதை கிடைக்கும், தேவையானதை சம்பாதிக்கலாம் என்ற கனவும், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் தவிடுபொடியாகியுள்ளது. ராஜினாமா செய்தவர்களும் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் கொள்ள தொடங்கிவிட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி முடிவு, பதவியை ராஜினாமா செய்து விட்டு வரும் எண்ணத்தில் உள்ள எம்எல்ஏக்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெகவை நம்பி வந்தவர்கள் தற்போது கட்சிப் பதவியும், அரசுப் பதவியும் இல்லாமல் வீதிக்கு வந்து விட்டதாக அதிமுக தலைவர்கள் தெரிவித்தனர்.

* பீகார், மத்திய பிரதேசம், குஜராத்தில் காலியாக உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் ஜூலை 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

* அதில் பதிவான வாக்குகள் ஆகஸ்ட் 3ம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags : Bihar ,M. ,BJP ,Gujarat ,Tamil Nadu ,Election Commission ,Dawa ,New Delhi ,Bihar, Madhya Pradesh, Gujarat ,
× RELATED மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு...