சென்னை: குதிரைப் பேரத்தில் ஏ1 ஆக விஜய் இருப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
நிர்மல் குமார் எத்தனாவது கட்சியில் இருக்கிறார், எனவே அவர் பேசுவதற்கு பதில் அளிக்க முடியாது. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்று கூறுவார்கள். பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்தார். தற்போது அமைச்சராக இருப்பதால் தலை கால் புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். தேர்தலில் தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக திமுக சேர்த்து 126 இடங்களில் வெற்றிபெற்றது. எனவே 126 இடங்களில் தவெக வேட்பாளர்களை எதிர்த்து நின்று வெற்றிபெற்றவர்கள், இதனை விஜய் மற்றும் சுற்றி இருப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எங்களுக்கு ஆட்சிப் பொறுப்பு கொடுத்து விட்டார்கள் என்று சொல்வது தவறு. 118 எம்.எல்.ஏக்களை. மக்கள் கொடுத்திருந்தால் ஆட்சி அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். தனிப் பெரும்பான்மையாக, அதிக எம்.எல்.ஏ. கொண்ட கட்சியாக கொடுத்தார்களே தவிர, திமுக அதிமுக கையில் தான் இந்த ஆட்சியின் கடிவாளத்தை கொடுத்திருக்கிறார்கள்.
எம்ஜிஆர் போன்று விஜய் தனியாக ஆட்சி அமைக்கவில்லை. அவர் தீய சக்தி என்று சொன்ன திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுடன், குறிப்பாக திமுக பெரிய கட்சி அவர்கள் இல்லாமல் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றிருக்க முடியாது. மதிமுக வைகோ மகன் துரை வைகோ வெற்றிபெற்றது திமுக கூட்டணியில்தான். மேலும் இந்தத் தேர்தலில் திமுக பல கோடி செலவு செய்தது என்று சொல்கிறார். 2024ம் ஆண்டு திருச்சியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டபோது திமுக ஆதரவோடுதான் வெற்றி பெற்றார். அப்போது திமுக செலவு செய்து வெற்றி பெற்றார் என்பதை அவர் உணர வேண்டும்.
இந்த நிலையில் அவர்கள் எம்.எல்.ஏ.க்கள் திமுக சின்னத்தில்தான் வெற்றிபெற்றார்கள். திமுகவுக்கு நன்றி உணர்வோடு, திமுகவால்தான் சீர்காழி மற்றும் கடையநல்லூரில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு நன்றி உணர்வுடன் அந்தக் கட்சியில் அந்த எம்.எல்.ஏ.க்களாகத் தொடர்கிறார்கள். ஆளுநர் மாளிகை முன்னரே நின்று குதிரைப் பேரம் நடந்துள்ளது எனக் கூறினேன். எங்கள் எம்.எல்.ஏ.வை அவர்கள் தட்டித் தூக்கியிருக்கிறார்கள். அதிமுக எம்.எல்.ஏ. தவெகவை எதிர்த்து நின்றுதான் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். அப்படி இருக்க தற்போது மிட்டாய் பார்த்த குழந்தை போல அங்கு ஓடினார்கள் என்றால் யாராலும் நம்ப முடியுமா? ஆட்சி அமைக்க பல கட்சி அலுவலகம் சென்றுதான் ஆட்சி அமைத்தார்கள். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜனாதிபதி ஆட்சிக்கு வரக் கூடாது, பாஜக உள்ளே வரக் கூடாது என்றுதான் ஆதரவு கொடுத்தோம் என்று சொன்னாலும் தார்மிக அடிப்படையில் அது தவறு.
ஆட்சி சென்றுவிடும் பயத்தில் அதிமுகவை உடைத்து, அன்று விஜய்க்கு ஆதரவு கொடுத்து தவறான முடிவு எடுத்தார்கள். அப்பொழுது சொன்னேன் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறீர்கள், விஜய் நடுரோட்டில் நிறுத்தப் போகிறார் என்று அன்றே சொன்னேன். தலைமை மீது அதிருப்தி இருந்தால் அவர்கள் கட்சியில் இருந்து அவருடன் பேசித் தீர்ப்பதுதான் நியாயமானதாக இருக்கும். அன்று கட்சி நிலைப்பாட்டை மீறி எடுத்த முடிவால்தான் இன்று அவர்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். எடப்பாடியை மாற்றினால் சரியாகிவிடும் என்று சொல்வது இவர்கள் செய்த தவறை மறைப்பதற்குச் செய்கின்ற நாடகம்தான்.
இதில் சுயநலத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. மதிமுக இருந்தாலும் அவர்கள் திமுக எம்.எல்.ஏ.க்கள். திமுக சொல்வதைத்தான் அவர்கள் கேட்பார்கள். எனவே அவர்களைப் பதவி விலகச் சொல்லி விஜய் சொன்னது என்பது எல்லாம் குதிரைப் பேரம்தான். அமமுக எம்.எல்.ஏ. கொடுத்த வழக்கு இன்னும் உள்ளது. உரிய நேரத்தில் நாங்கள் அதனை கையில் எடுப்போம். அதில் உறுதியாக ஏ1 ஆக விஜய் இருப்பார். குதிரைப் பேரம் செய்தது அவர்தான்.
