சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.172 குறைந்துள்ளது. ஈரான் போர் காரணமாக நம் நாட்டில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வணிக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதேவேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது ஈரான் போர் முடிவடைந்த நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு தளர்த்தியது. இந்நிலையில் சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்த விலைக்குறைப்புக்குப் பிறகு, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.3,106 ஆகக் குறைந்துள்ளது. எனினும், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் நுகர்வோருக்கு இந்த முறை எந்தவித விலைக் குறைப்பும் அறிவிக்கப்படவில்லை. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எவ்வித மாற்றமுமின்றி ரூ.957.50 என்ற அளவிலேயே நீடிக்கிறது. மேற்காசிய போர் சூழல் காரணமாக கடந்த 4 மாதங்களாக உயர்ந்து வந்த சிலிண்டரின் விலை தற்போது குறைந்துள்ளது. இதனால் வணிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
