×

அதிமுகவில் மேலும் 2 பேர் ராஜினாமா செய்ய முடிவு 12 எம்எல்ஏக்களுடன் தவெக பேரம்: பொறுப்புகள் வழங்க எடப்பாடி பழனிசாமி மறுப்பதால் மேலும் பலர் அதிருப்தி

கோவை: அதிமுகவில் இருந்து மேலும் 2 பேர் ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அதிமுகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்களுடன் தவெக பேரம் பேசி வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்க எஸ்.பி.வேலுமணி மறுத்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் காரணமாக, எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணி உருவானது.

அந்த அணியில் இருந்த 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும், பல மாவட்ட செயலாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டனர். பின்னர், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இரு அணிகளும் மீண்டும் இணைந்தன. இணைப்பு ஏற்பட்ட பிறகு, எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், பல ஆண்டுகளாக மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் அதே பதவியை வழங்கவில்லை. இந்தநிலையில், எஸ்.பி.வேலுமணி அணியின் ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் அதிமுக கட்சி கொடி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இடம்பெறவில்லை.
இக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: நான் பதவி வேண்டாம் என்று சொல்லவில்லை. என்னை நம்பி வந்தவர்களை விட்டு விட்டு, எனக்கு மட்டும் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கினால், நான் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக்கு அளித்த பதவியை நான் ஏற்கப்போவது இல்லை. என்னுடன் 30 மாவட்ட செயலாளர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை.

வீரமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் இவர்கள் எல்லாம் அந்தந்த மாவட்டத்தில் ஜாம்பவான்கள். கட்சியை வளர்த்து எடுப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் பதவி ெகாடுக்கவில்லை. என்னை நம்பி பின்னாடி இருந்தவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டவர்கள். பணம் செலவு செய்து கட்சியை வளர்த்தவர்கள். என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு நான் பதவி வாங்க தயாராக இல்லை. இவ்வாறு எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி.வேலுமணி, ‘‘தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சிக்காக இரவு, பகலாக உழைத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவும், அவர்களுடன் மதிய உணவு பகிர்ந்துகொள்ளவும் மட்டுமே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை. கூட்ட அரங்கில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெற்றிருந்தன’’ என்றார். ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற சில நிர்வாகிகள் வேறு விதமாக தகவல் தெரிவித்தனர்.

அதாவது, கூட்டம் துவங்கியதில் இருந்தே எஸ்.பி.வேலுமணி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததாகவும், பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பதவி குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறினர். மேலும், ‘‘கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக 21 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளேன். ஆனால், இன்று வேறு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பதவியை மீண்டும் வழங்கினால்தான் கட்சியை முழு திறனுடன் என்னால் இயக்க முடியும்’’ என்று பேசியுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, எஸ்.பி.வேலுமணி தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில், மாவட்ட செயலாளர் பொறுப்புகளை மீண்டும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவை உடைக்க தவெக தீவிரம் காட்டி வருகிறது. 12 எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசி வருகிறது.

புவனகிரி அருண்மொழித்தேவன், சங்கராபுரம் ராகேஷ் ஆகியோர் தவெக வலையில் விழுந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன் மற்றும் திருத்தணி ஹரி உள்ளிட்டவர்களுடன் தவெக பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் அமைச்சர் பதவி தர முடியாது. எம்எல்ஏக்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் எம்எல்ஏ சீட் கொடுக்கிறோம். கட்சிப் பொறுப்பு கிடையாது.

நீங்கள் வேலை செய்யுங்கள். அதன்பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளனர். பணம் கேட்டவர்களுக்கு பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொறுப்புக்களை கொடுக்காததால், பேசாமல் தவெக பக்கம் போனால், ஆளும் கட்சி என்ற அந்தஸ்து கிடைக்கும் என்று நினைத்துத்தான் செல்கின்றனர்.
அதேநேரத்தில், தவெக தரப்பில் வேலுமணியிடம் பேசியுள்ளனர்.

ஆனால், அவரோ இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. எனக்கு அதிமுகவும், அதன் தொண்டர்களும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார். இதனால், அவர் மட்டும் தற்போது தவெக பக்கம் போகாமல் உள்ளார். மற்றவர்களுடன் தவெக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* ‘எதுவாக இருந்தாலும் சொல்லுவேன்’
சென்னை செல்ல கோவை பீளமேடு விமான நிலையத்துக்கு நேற்று வந்த எஸ்.பி.வேலுமணியிடம், சென்னைக்கு எதற்காக செல்கிறீர்கள் என நிருபர்கள் கேட்ட போது, ‘‘சென்னைக்கு புதுசாவா போறேன். வாரம் இரண்டு முறை போகிறேன்’’ என்றார். ஒரே பரபரப்பாக உள்ளதே? என்ற கேள்விக்கு, ‘‘ஒன்னும் இல்லை.

பரபரப்பை நீங்கள் தான் பண்ணுகிறீர்கள்’’ என்றார். சபாநாயகரை சந்திப்பீர்களா, நம்பி வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கவில்லை என்று பேசியுள்ளீர்களே என்ற கேள்விக்கு, நேரடியாக பதிலளிக்காமல், ‘‘மீடியாவே அதிமுகவில் நாங்கள் இருக்க கூடாது என்று பிளாஸ் நியூஸ் போடுகிறீர்கள். எதுவாக இருந்தாலும் பத்திரிகைகளுக்கு சொல்லுவேன்’’ என்று கூறியபடி புறப்பட்டு சென்றார்.

* சேலத்தில் எடப்பாடி ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு சேலம் வந்தார். சேலத்தில் முகாமிட்டிருந்த அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வந்தார். இந்நிலையில் நேற்று கோவை மாவட்ட செயலாளர் செ.மா.வேலுசாமி மற்றும் சூலூர் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த மோப்பிரிப்பாளையம் பேரூராட்சி தலைவர் சசிக்குமார் உள்பட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். தங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கேட்டு வேலுமணி உள்பட நிர்வாகிகள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் கோவையில் எஸ்.பி.வேலுமணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இந்நிலையில் செ.மா.வேலுசாமி தலைமையில் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சேலத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Tags : Atamugat ,Eadapadi Palanisami ,KOWAI ,ADAMUGA ,General ,Edappadi Palanisami ,Velumani ,
× RELATED கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்...