×

கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் இமாச்சலில் 3வது அணியை உருவாக்கும் பாஜக மாஜி அமைச்சர்; ஆளும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களுக்கு வலை

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் கட்சியைத் தொடங்க முன்னாள் அமைச்சர் ராமலால் மார்கண்டா வியூகம் வகுத்துள்ளார். இமாச்சல பிரதேசத்தின் லாஹவுல் மற்றும் ஸ்பிதி தொகுதியில் பாஜக சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் அமைச்சர் ராமலால் மார்கண்டாவுக்கு கடந்த 2024ம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் கட்சி வாய்ப்பு வழங்காததால், சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

அதனால் இவரை பாஜக கட்சியிலிருந்து நீக்கியது. இதற்கு முன்பாக 1990ம் ஆண்டில் விஜய் சிங் மன்கோடியா, 1998ம் ஆண்டில் சுக்ராம் மற்றும் 2012ம் ஆண்டில் மகேஸ்வர் சிங் போன்ற தலைவர்கள் காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இருந்து பிரிந்து தனிக் கட்சிகளைத் தொடங்கியுள்ளனர். இதில் 1998ம் ஆண்டில் சுக்ராம் தொடங்கிய ஹிமாச்சல் விகாஸ் காங்கிரஸ் 5 இடங்களில் வென்றது. கடந்த பிப்ரவரியில் நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தது அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வரும் 2027ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக ராமலால் மார்கண்டா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலும் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு அவமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதால் ஒரு மாற்று அணியை உருவாக்குவது அவசியமாகிறது. இதற்காகப் பல முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்’ என்றார்.

இதுகுறித்து மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இதுகுறித்து கூறுகையில், ‘மாநிலத்தில் இதுபோன்று பலமுறை மூன்றாவது அணிகள் உருவாகி மறைந்துள்ளன’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : BJP ,Maji minister ,Imachal ,Congress ,Shimla ,Former minister ,Ramalal Marganda ,Himachal Pradesh ,Lahaul ,Spiti ,Himachal Pradesh L. A. ,
× RELATED எம்பி-க்களுக்கு அசைவம்.....