×

என்எல்சி பங்கு விற்பனை: ஒன்றிய அரசு, என்எல்சி நிர்வாகத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

 

சென்னை: என்எல்சி பங்குகளை விற்க முயலும் ஒன்றிய அரசு, என்எல்சி நிர்வாகத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எனப்படும் என்எல்சி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முக்கியமான பொதுத் துறை நிறுவனமாகும். நவரத்தினா அந்தஸ்து பெற்றுள்ள இந்நிறுவனம் தனது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் நடப்பாண்டில் 3,769 கோடி ரூபாயை லாபமாக ஈட்டி உள்ளது.

இப்படி லாபகரமாக இயங்கி வரும் என்எல்சி நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை, பங்குச் சந்தை மூலம் தனியாருக்கு விற்பனை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் என்எல்சி நிறுவனம் அமைக்கப்படும்போது, ஏறக்குறைய 23 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அரசுதான் நிறுவனத்தை நடத்தும் என்ற நம்பிக்கையோடு அப்பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து தங்களது நிலங்களை வழங்கினார்கள்.

அவர்களது நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில், என்எல்சி நிறுவனத்தை தொடர்ந்து அரசுடைமை நிறுவனமாகவே நடைபெறுவதை, அதிமுக உறுதி செய்யும் என்பதை இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.

* ஒன்றிய அரசு என்எல்சி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் போக்கினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

* கடந்த காலங்களில் என்எல்சி பங்கு விற்பனைக்கு எதிரான, உறுதியான நிலைப்பாட்டை எடுத்து அதனைத் தடுத்து நிறுத்திய அதிமுக தற்போதும் என்எல்சி நிறுவன பங்கு விற்பனையை தடுத்து நிறுத்தப் போராடும்.

* கடந்த காலங்களில் என்எல்சி பங்கு விற்பனைக்கு எதிரான, உறுதியான நிலைப்பாட்டை எடுத்து அதனைத் தடுத்து நிறுத்திய அதிமுக தற்போதும் என்எல்சி நிறுவன பங்கு விற்பனையை தடுத்து நிறுத்தப் போராடும்.

* ஒன்றிய அரசின் கொள்கை முடிவை எதிர்த்துப் போராடும் என்எல்சி ஊழியர் சங்கங்கள், அதிகாரிகள் சங்கம், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும், அதிமுக முழு ஆதரவை வழங்கும்.

‘ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்’ என்ற குறளைப் பின்பற்றி ஜெயலலிதா 2013-ஆம் ஆண்டு அப்போதைய ஒன்றிய காங்கிரஸ் அரசு என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முற்பட்டபோது, சுமார் 3.56 சதவீத பங்குகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வாங்கியதைப் போல, தற்போதைய தவெக அரசும், என்எல்சி நிறுவனப் பங்குகளை வாங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். 2013-ல் ஜெயலலிதா என்எல்சி பங்குகளை வாங்கியதன் மூலம், என்எல்சி பங்குகள் தனியார் வசம் போவது தடுக்கப்பட்டது.

தொழிலாளர் நலன் காக்கப்பட்டது மற்றும் தமிழக அரசிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு இன்று பலமடங்கு உயர்ந்துள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தவெக அரசின் முதல்வரை வற்புறுத்துகிறேன். என்எல்சி பங்குகளை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை தவெக அரசின் முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதன்மூலம் என்எல்சி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலன் காக்கப்படுவதுடன், அப்பகுதி மக்களின் எதிர்காலமும் காக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : NLC ,Edappadi Palaniswami ,Union Government ,Chennai ,AIADMK ,General Secretary ,Neyveli Lignite Corporation ,Neyveli, Cuddalore district… ,
× RELATED தமிழ்நாட்டில் 7 தொகுதிகளில்...