×

தயாராக இருங்கள் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்; தவெகவின் ஒரு மாத ஆட்சியில் தமிழ்நாடு அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது: அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் 5000 பேர் திமுகவில் இணைந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை: தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். திமுகவினர் தயாராக இருக்க வேண்டும். தவெகவின் ஒரு மாத ஆட்சியில் தமிழ்நாடு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது. முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

5000 பேர் இணைய கூடிய மிகச் சிறப்பான நிகழ்ச்சியில், கழகத்தில் இணையும் விழா அன்புக்கும் பெருமைக்குரிய முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தாய்க்கழகத்தில் வந்து இணைந்து இருக்க கூடிய அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். தலைமை கழக தொண்டனாக உங்களை வரவேற்கிறேன். பவள விழா கண்டு இருக்க கூடிய கழகத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஆறு முறை ஆட்சி புரிந்த கட்சிக்கு வந்துள்ளீர்கள்.

நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கழகத்திற்கு வந்துள்ளீர்கள். எம்ஜிஆர் பொருளாளராக இருந்த கட்சி திமுக. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தான் முதலில் எம்ஜிஆர் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து தனி கட்சியை கண்டார். அப்போது கூட சட்டமன்றத்தில் கலைஞர் பெயரை குறிப்பிட்டு ஒரு உறுப்பினர் பேசும்போது எம்ஜிஆர் அதை கண்டித்தார். பென்ஜமினை ரொம்ப காலமாக கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்‌‌. அவருடைய உழைப்பைப் பற்றி நான் அங்கு அறிவேன்.

அதிமுகவில் இணைந்து பல ஆண்டுகள் உண்மையாக உழைத்தவர். ஓயாமல் உழைத்தவர். எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஓயாமல் உழைத்தவர். யாருக்கும் அஞ்சாமல் உழைத்தவர். வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர், மாமன்ற உறுப்பினர், மாநகராட்சியின் துணை மேயர் என்று படிப்படியாக உயர்ந்து சென்னை மாநகர முழுவதும் அறிமுகமானவர். 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பள்ளி கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு உள்ளார். சட்டமன்றத்தில் அமைச்சர் பென்ஜமின் பதில் பேசுகிறார் என்றால் ஆதாரத்துடன் பேசுவார்.

அழுத்தம் திருத்தமாக எடுத்து சொல்பவர். பென்ஜமினை ஏமாற்ற முடியாது. பென்ஜமின் கழகத்திற்கு வந்ததற்கு உங்களை விட நான் அதிகம் மகிழ்ச்சி அடைகிறேன்‌‌. வரலாற்றில் ஒரு பதிவாக இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். பொதுவாக, ஒரு தேர்தல் முடிவு வந்தால் வெற்றி பெறும் இயக்கத்தை நோக்கி நிறைய நபர்கள் செல்வார்கள். ஆனால் இங்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் பெருவாரியான மக்கள் வந்து இணைகிறார்கள். இது பொறுப்புக்காகவும் பதவிக்காகவும் அல்ல.

கொள்கைக்காக வந்து சேருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் எந்த துறையில் பார்த்தாலும் இதுவரை தமிழகம் கண்டிராத வளர்ச்சியை தமிழ்நாடு பார்த்துள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி உள்ளோம். தினமும் ஒரு திட்டம் என்கிற வகையில் அனைத்து திட்டத்தை உருவாக்கியுள்ளோம். எல்லா தரப்பு மக்களையும் கவரக்கூடிய வகையில் திட்டங்களை தீட்டி மக்களுக்கு சென்று சேர்ந்தது. ஆட்சியின் மீது இருந்த நம்பிக்கையில் தான் தமிழகம் நோக்கி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் உலகில் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் இங்கு வந்தன.

தொழில் தொடங்கியது மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு அதிகரித்தது. அண்டை மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் கூட இதை வெளிப்படையாக பார்த்து பாராட்டினார்கள், பொறாமைப்பட்டார்கள். தற்போது ஆட்சி மாற்றம் நடைபெற்று உள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தில் ஒரு மாதத்தில் தமிழ்நாடு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. முதலீட்டாளர்கள் அண்டை மாநிலத்திற்கு செல்கிறார்கள். சட்டம் ஒழுங்கு குறித்து சொல்லவே தேவையில்லை.

பாலியல் கொடுமைகள், போதைப்பொருள் நடமாட்டம், கொலை, கொள்ளைகள், அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என டிவி, பேப்பரை பார்த்தால் இதுதான் உள்ளது. இதில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள நபர்களே சம்பந்தப்பட்டு உள்ளார்கள் என்பது தான் வேதனை. ஒரு பக்கம் மின்சாரம் இல்லாமல் பாதிப்பு. ஒரு டேக் டைவர்சன் வைத்து ஆட்சி நடத்தி வருகிறார்கள். ஓட்டு போட்டவர்களும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஓட்டு போடாதவர்களும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் மக்களுக்கு துணையாக திமுக தான் இருக்க வேண்டும்.

நாங்கள் பார்த்து தமிழ்நாட்டை சீரழிக்க விடக்கூடாது. திமுகவைப் போல வெற்றி பெற்ற கட்சியும் இல்லை. தோல்வி பெற்ற கட்சியும் இல்லை‌. பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட கட்சி இது. 1949ம் ஆண்டு கொட்டும் மழையில் வடசென்னையில் ராபின்சன் பூங்காவில் அண்ணாவால் உருவாக்கப்பட்டு தலைவர் கலைஞரால் வலிமையான பலத்தோடு திராவிட முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை வீழ்த்த முடியாது. உலகத்தில் எங்குமே இல்லாத ஒரு திட்டமான மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வந்தோம்.

நம்மை பார்த்து தான் லண்டன் நாட்டில் கூட அதை மேற்கொண்டார்கள். தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வைத்த வரைக்கும் அண்ணாதுரை பெயர் இருக்கும் என்று கூறினார். மகளிர் உரிமைத்தொகை திட்டம், பேருந்தில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணம் திட்டம், காலை உணவு திட்டம், தாயுமானவர் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் இருக்கும் வரை மு.க.ஸ்டாலின் பெயர் இருக்கும். தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். மூன்று மாதம் பிறகு கூட வரலாம், ஆறு மாதம் கழித்து வரலாம்.

இந்த ஆட்சி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறவில்லை. 108 தான் வெற்றி பெற்றார்கள்‌. ஸ்டாலின் தான் வரணும் என்று ஓட்டு போட்டார்கள். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவில் தான் இந்த ஆட்சி ஓடிக் கொண்டு உள்ளது. இந்த வண்டி எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை. எப்போது எங்கு நடந்தாலும், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும். 100% தயாராக இருக்க வேண்டும். கழகத்தின் வெற்றிக்கு இந்த நிமிடத்தில் இருந்து உழைக்க தயாராக இருங்கள்.

தாய்க் கழகத்திற்கு தேடி வந்திருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் பென்ஜமின் மற்றும் அவருடன் இணைந்துள்ள அனைவரையும் மீண்டும் ஒருமுறை வருக வருக என அழைத்து விடைபெறுகிறேன். உண்மையான உழையுங்கள். உங்களுக்கான அங்கீகாரம் உங்களை தேடிவரும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியின் நிறைவில் மு.க.ஸ்டாலினுக்கு செண்பகப்பூ மாலை அணிவித்து வெள்ளிவாளை பரிசாக பென்ஜமின் வழங்கினார்.

இதில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ஆவடி சா.மு.நாசர், முன்னாள் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், பூந்தமல்லி டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மண்டலக் குழு தலைவர் நொளம்பூர் ராஜன், காயத்ரி ஸ்ரீதரன், நகர, ஒன்றிய செயலாளர்கள் என்.இ.கே.மூர்த்தி, அயப்பாக்கம் துரை வீரமணி, ப.ச.கமலேஷ், ஏ.ஜெ.பவுல் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

* தொழில் நிறுவனங்கள் இந்த புதிய ஆட்சியை நம்பித் தமிழ்நாட்டுக்கு வர பயப்படுகிறார்கள், தயங்குகிறார்கள். வேறு மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

* சட்டம்-ஒழுங்கைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பாலியல் கொடுமைகள், போதை மருந்து நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டுகள், கொள்ளைகள் மற்றும் அராஜகங்கள்.

* இன்னொரு பக்கத்தில் மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு பிரச்னைகள். எதைப் பற்றியும் கவலைப்படாமல், “டேக் டைவர்ஷன்” என்று திசைதிருப்பும் வேலைகளில் ஆட்சியாளர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

Tags : Tamil Nadu ,Athalabad ,Daveva ,Dimuka ,former minister ,Benjamin. ,K. Stalin ,Chennai ,Daweka ,President of the Ministry ,Srivaru Hall ,Minister of State ,
× RELATED வடகிழக்கு பிரான்ஸில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 11 பேர் பலி