×

கச்சா எண்ணெய் விலை 73 டாலராக சரிவு; காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என எதிர்பார்ப்பு

சேலம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 73 டாலராக சரிந்துள்ளதால், காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடுத்தன. இதனால், வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதன்காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் சர்வதேச சந்தையில் அதன் விலையேற்றம் பன்மடங்கு அதிகரித்தது. ஒரு பீப்பாய் பிராண்ட் கச்சா எண்ணெய் 65 டாலர் என்றிருந்தநிலையில், 110 டாலராக அதிகரித்தது.

இந்த கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தின் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தொடர்ந்து உயர்த்தியது. இதனால் தற்போது பெட்ரோல் சராசரியாக ஒரு லிட்டர் ரூ.108க்கும், டீசல் ரூ.100க்கும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1000க்கும், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.3000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில், எரிபொருளுக்கான இவ்விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரான் அரசுடன் அமெரிக்கா நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளும் இறுதி நிலை எட்டியுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் போக்குவரத்திற்காக ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்துவிட்டுள்ளது. அந்த வழியே இந்தியாவிற்கு 11 எண்ணெய் கப்பல்கள் நேற்று முன்தினம் கடந்தது. இந்த கப்பல்கள் ஓரிருநாளில் இந்திய துறைமுகங்களை வந்தடையவுள்ளது. அதேபோல், மற்ற உலக நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது.

இதன்காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. பிராண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 110 டாலர் என்றிருந்த நிலையில் இருந்து, இன்று காலை 73 டாலராக சரிந்துள்ளது. இந்த விலையானது, வரும் நாட்களில் மேலும் குறையும் என கச்சா எண்ணெய் வணிக நிபுணர்கள் கணித்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை 73 டாலராக குறைந்ததால், இந்தியாவில் பங்குசந்தை ஏற்றம் கண்டு வருகிறது. குறிப்பாக விமான போக்குவரத்துத்துறையில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல், மற்ற வணிக நிறுவனங்களின் பங்குகளும் உயரத்துவங்கியுள்ளன. இந்த கச்சா எண்ணெய் விலை குறைவின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில், காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குறிப்பாக வரும் ஜூலை 1ம் தேதி காஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கவுள்ளன. அதில், வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலையை பெருமளவு குறையுமா என எதிர்நோக்கியுள்ளனர். அதேபோல், பெட்ரோல், டீசல் விலையை ஒரு மாதத்திற்குள் ரூ.8 வரை உயர்த்தினர். அப்படி ஏற்றப்பட்ட விலையையாவது குறைக்க வேண்டும். ஆனால், இந்த விலை குறைப்பு நடவடிக்கை தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வாய் திறக்காமல் மவுனமாக உள்ளன.

Tags : Salem ,Israel ,US ,Iran ,
× RELATED திருவள்ளூர் பெரியபாளையம் அமோனியா விஷவாயு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு