×

குன்னூரில் போக்குவரத்து போலீசார் திடீர் ரெய்டு; குடிபோதையில் டிக்கெட் கொடுத்த மினி பஸ் கண்டக்டர் சிக்கினார்

குன்னூர், ஜூன் 24: குன்னூரில் மினி பேருந்துகளில் போக்குவரத்து போலீசார் அதிரடி ஆய்வு நடத்தியதில் குடிபோதையில் இருந்த நடத்துநர் மீது வழக்கு பதிவும், ஏர் ஹாரன்கள் பொருத்திய வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இருந்து பல்வேறு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வழித்தடங்களுக்கு ஏராளமான மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக, இந்த மினி பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது போதையில் வாகனங்களை இயக்குவதாகவும், தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பயன்படுத்தி அதிவேகமாகச் செல்வதாகவும் பொதுமக்கள் தரப்பில் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, கடந்த 17ம் தேதி வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பிரபாகரன் தலைமையில் முதற்கட்ட ஆய்வு நடத்தப்பட்டு, விதிகளை மீறிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று 2வது முறையாக குன்னூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் போலீசார் மினி பேருந்துகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 13-க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ஒரே மினி பேருந்தில் 6 ஏர் ஹாரன்கள் சிக்கியது.

இந்த திடீர் சோதனையில், காலையிலேயே மினி பேருந்து நடத்துநர் ஒருவர் கடுமையான மது போதையில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்தனர். உரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கிய நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, போலீசார் கடுமையான எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மினி பேருந்துகளில், ஓட்டுநர்களோ அல்லது நடத்துநர்களோ குடிபோதையில் பணியில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என குன்னூர் நகர போக்குவரத்து போலீசார் ஓட்டுநர்களுக்கும், பேருந்து உரிமையாளர்களுக்கும் திட்டவட்டமாக எச்சரித்துள்ளனர்.

Tags : Gunnar ,Nilgiri District ,Kunnur ,
× RELATED குன்னூரில் தொடரும் கரடி நடமாட்டம்; பொதுமக்கள், தொழிலாளர்கள் அச்சம்