×

கரியமலை அம்மன் கோயில் கதவை உடைத்த கரடி

 

மஞ்சூர்,ஜூன்23: மஞ்சூர் அருகே கரியமலையில் உள்ள அம்மன் கோயில் கதவை உடைத்து பூஜை பொருட்களை சூறையாடிய கரடியால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளார்கள். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. தினசரி இரவு நேரங்களில் நடமாடும் கரடிகள் பூட்டி கிடக்கும் கடை, வீடுகளின் கதவை உடைப்பதும் பொருட்களை சூறையாடிவதும்வாடிக்கையாக உள்ளது.கரடிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கரியமலை பகுதியில் உலா வந்த கரடி அங்குள்ள காளியம்மன் கோயில் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தது.

அங்கு பூஜை பொருட்களை கீழே தள்ளி சூறையாடியதுடன் தீபம் எண்ணை பாட்டில்களை தூக்கி சென்றுள்ளது. அதற்கு முன் தினம் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் கதவை உடைத்து பொருட்களை நாசம் செய்த நிலையில் கோயில் கதவையும் கரடி உடைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் நடமாடும் கரடிகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் தலைவர் மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் பாக்கொரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணியளவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி ஒன்று பூட்டி கிடந்த வீட்டு கதவை உடைக்க முயன்றது.

அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் சத்தம் போடவே கரடி அங்கிருந்து ஓடியது. மேலும் முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் மஞ்சூர் மின்வாரிய மேல்முகாம் பகுதியில் உலா வந்த கரடி சாலையில் சாவகாசமாக நடந்து சென்றது. தொடர்ந்து பிஎஸ்என்எல்அலுவலகம் அருகே சாலையோரத்தில் இருந்த சாம்பிராணி மரத்தின் அருகே சென்ற கரடி எழுந்து நின்று சாம்பிராணி இலைகளை வாயால் கவ்வி பறித்தது. இதை அவ்வழியாக காரில் சென்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags : Kariyamalai ,Amman temple ,Manjoor ,Amman ,Nilgiris district ,
× RELATED குன்னூரில் போக்குவரத்து போலீசார்...