* திருட்டு, பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரிப்பு
திருவள்ளூர்: தமிழ்நாட்டிற்கு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு தொழில்களை செய்வதற்காகவும், வியாபாரம் செய்வதற்காகவும், கூலி வேலைக்காவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் கட்டுமானப் பணிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேஸ்திரி வேலை, தினக்கூலி என அனைத்து பணிகளையும் குறைந்த சம்பளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களே செய்தனர். இரவு பகல் என எதையும் பார்க்ககாமல், தங்குவதற்கு இடம் இல்லை என்றாலும் கூட கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திலேயே தங்கி, தூங்கி, சமைத்து சாப்பிட்டு தங்கள் வேலைகளை செய்து வந்தனர்.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வீடு கட்டும் உரிமையாளர்கள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் உரிமையாளர்கள் இங்குள்ள இன்ஜினியர் அல்லது மேஸ்திரி ஆகியோரிடம் பணிகளை ஒப்படைத்து விடுகின்றனர். இவர்கள் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களை வரவழைத்து குறைந்த சம்பளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் குடிசை அமைத்து கொடுத்து அதிலேயே தங்க வைக்கின்றனர். அதனால் தங்குவதற்கு வீட்டு வாடகை என செலவு செய்யாமல் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவதால் ஓட்டலில் வாங்கி சாப்பிட செலவு செய்யாமல் வாங்கும் சம்பளத்தை அப்படியே ஊருக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் வட மாநிலத்தவர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்றைக்கு கட்டுமானப் பணிகள் செய்வது பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டனர். அதே போல் ஃபாஸ்ட்புட் உணவகங்கள் செயல்படத் தொடங்கியதும் வட மாநிலத்தவர்கள் வந்த பிறகு தான் அதிகரித்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உரிமையாளர்கள் மட்டுமே தமிழர்கள். மற்றபடி சமையல் மாஸ்டர், சப்ளை செய்பவர்கள், எடுபிடி வேலை செய்பவர்கள் எல்லாமே வட மாநிலத்தவர்களாகத் தான் உள்ளனர். இதனாால் வட மாநிலத்தவர்கள் அதிகளவில் தமிழ்நாட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் எலக்ட்ரிக்கல்ஸ், ஹார்டுவேர்ஸ் கடைகளும் வட மாநிலத்தவர்கள் தான் அதிகளவில் நடத்தி வருகின்றனர்.
மொத்த விற்பனை முதல் சில்லறை விற்பனை கடை வரை வட மாநிலத்தவர்களின் ஆதிக்கமே அதிகளவில் காணப்படுகிறது. தற்போது விவசாயத்தில் நாற்று நடும் தொழில் உள்பட அனைத்து விவசாயத் தொழிலிலும் வட மாநிலத்தவர்கள் புகுந்துவிட்டனர். இதுதவிர பானிபூரி கடை, சமோசா கடை, பாப்கார்ன் கடை, பஞ்சுமிட்டாய் கடை என அனைத்து உணவுப் பண்டங்களின் விற்பனையிலும் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கமே அதிகளவில் உள்ளது. மேலும் செருப்பு, ஷூக்கள், டிராவல் பேக், பேண்ட், சர்ட், சேலை, வாட்ச் ஆகியவற்றையும் வீடு வீடாக, தெருத் தெருவாக சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி பகுதியில் தொழிற்சாலைகள் அதிகளவில் இருப்பதால் அங்கு வேலை செய்ய வட மாநிலத்தவர்கள் அதிகளவில் அங்கு வந்து தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இவ்வாறு வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு, குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிகளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் முழுவதும் இதை நிலை தான் உள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் தமிழர்களின் எண்ணிக்கையை விட வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை சமமாகவோ, அல்லது அதை விட கூடுதலாகவோ போக வாய்ப்பு இருக்கிறது. தனியாக அமைச்சரவையை ஏற்படுத்த சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்தளவுக்கு வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை உள்ளது. இவர்களாளே தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. எனவே வட மாநிலத்தில் இருந்து வருபவர்கள் யார், அவர்களின் விவரம் அனைத்தும் தமிழகத்திலிருந்து சென்று அழைத்து வருபவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அதுவும் முழுமையான விவரம் தெரியுமா என்பது கேள்விக்குறியே. அவர்கள் என்ன படித்து இருக்கிறார்கள், அவர்கள் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா, தீராத நோய் உள்ளதா, திருமணம் ஆனவரா, மனைவி குழுந்தைகள் உள்ளனரா என்ற விவரம் எதுவும் கேட்பதுமில்லை அவர்கள் தருவதுமில்லை என்ற நிலை தான் உள்ளது. இந்நிலையில் இவ்வாறு வட மாநிலத்தில் இருந்து வரும் இளைஞர்கள் பெரும்பாலும் வேலை முடிந்து ஊரை சுற்றி வரும் வேளையில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களிலும், பாலியல் பலாத்காரம் செய்வதிலும் சிக்கி கைதாகும் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் கடந்த 2025ல் நாட்டையே உலுக்கிய சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீ பிஸ்வகர்மா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கடந்த 14ம் தேதி வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகளின் 3 வயது குழந்தையை வட மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சி என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவமுமே சாட்சியாகும். தமிழகத்தில் பொதுவாக தமிழர்களால் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடைபெறாத நிலையில் வட மாநிலத்தவர்களால் நடைபெறுவதால் தமிழக அரசு விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதாவது தமிழக முகவரியில்லாமல் வட மாநில முகவரியில் இருந்து யார் தமிழகத்திற்கு வந்தாலும், அவர்களது முழுவிவரம் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிடவேண்டும். அவர்கள் யார் மூலம் அழைத்து வரப்பட்டார்கள், அவர்களது விவரமும் இணைத்து சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும். இது போன்று நடவடிக்கைகளை துரிதப்படுத்தினால் மட்டுமே திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதிலும் வட மாநில இளைஞர்களால் ஏற்படும் திருட்டு, வழிப்பறி, பாலியல் குற்றங்கள் குறையும். இதுபற்றி நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..பொறுத்திருந்து பார்ப்போம்…
