×

ஜாலியாக இருக்கவே ஐஏஎஸ் அதிகாரிகள் புதுச்சேரி வருகிறார்கள்: முதல்வர் ரங்கசாமி ஆதங்கம்

 

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜாலியாக இருக்கவே ஐஏஎஸ் அதிகாரிகள் வருவதாக, தன்னிடம் புகார் மனு அளிக்க வந்த தவெக எம்எல்ஏவிடம், முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார். புதுச்சேரி தவெக எம்எல்ஏ சாய்.ஜெ.சரவணன்குமார் நேற்று மாலை சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனுகொடுத்தார்.

அதில், புதுச்சேரியில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு சீருடை, புத்தகம் முழுமையாக தரவில்லை. புதுச்சேரியை விட பெரிய பகுதியான கடலூரில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி நிர்வாகம் நடத்துகிறார். புதுச்சேரியில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தும் தாமதமாகிறது. அதிகாரிகளை கூப்பிட்டு பேசுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

அதை பெற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, இவ்விவகாரத்தில் தனக்குள்ள ஆதங்கத்தையும் தவெக எம்எல்ஏவிடம் கொட்டித் தீர்த்துள்ளார். அப்போது புதுச்சேரி நிர்வாகம் வேறு. தமிழகம், கர்நாடகம், கேரளம் நிர்வாகம் வேறு. அங்கு முதல்வர் சொன்னால் அதிகாரிகள் உடனே செய்வார்கள். இங்கு எல்லா கோப்புகளையும் துணைநிலை ஆளுநருக்குதான் அனுப்ப வேண்டும். இதையெல்லாம் தாண்டிதான் வேலை செய்கிறோம். இங்கு ஜாலியாக இருக்கத்தான் அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் வருகிறார்கள் என்றார்.

பின்னர் தவெக எம்எல்ஏ சாய்.ஜெ.சரவணகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 3970 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு 7 ஐஏஎஸ் அதிகாரிகள்தான் உள்ளனர். ஆனால் புதுச்சேரியில் 492 சதுர கிலோமீட்டருக்கு 20க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். தலைமை செயலருக்கு தமிழ் தெரியவில்லை, முதல்வருக்கு இந்தி தெரியவில்லை. ஆனால், முதல்வர் கூறுபவைகளை புரிந்து கொண்ட மாதிரி தலையை ஆட்டிவிட்டு மட்டும் செல்கின்றார். எனவே இனி முதல்வரை சந்திக்க தனி செயலருடன் அவர் வர வேண்டும் என்றார்.

Tags : IAS ,Puducherry ,Chief Minister ,Rangasami Aadangam ,Rangasamy ,MLA ,Jali ,Taveka ,J. Saravanankumar ,
× RELATED ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட...