×

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய தமிழக முதல்வரிடம் பேசி தீர்வு

 

திருச்செங்கோடு, ஜூன் 16: பல்வேறு துறைகளில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக தமிழக முதல்வரிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், நேற்று மகளிர் திட்டம், தொழிலாளர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 497 பயனாளிகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: நிபா வைரஸ் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை. சிக்கெலா பாக்டீரியா பாதித்து, கேரளாவில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளான். சுகாதாரமற்ற சூழல் நிலவும் இடங்களில், இந்த பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் உள்ள உணவகங்களில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறதா என, உணவு பாதுகாப்பு அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவிட்டிருக்கிறோம். சுகாதாரமற்ற சூழல் நிலவும் உணவு விடுதிகளில், மாதிரிகளை எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.

அரசு மருத்துவமனைகளில் 97 சதவீத பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், இப்போதுள்ள பணியிடங்கள் போதாது. இதனை முதல்வரிடம் பேசி, கூடுதலான பணியிடங்கள் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும். ஒப்பந்த பணியாளர்கள் மருத்துவத்துறை மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் உள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வரிடம் பேசி தக்க தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் பேசினார்.

நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் லேகா தமிழ்செல்வன், திருச்செங்கோடு ஆர்டிஓ லெனின், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், இணை இயக்குநர் மல்லிகா, துணை இயக்குநர் புவனேஸ்வரி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் இந்தியா, திருச்செங்கோடு நகராட்சி கமிஷனர் வாசுதேவன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Tamil Nadu ,Chief Minister ,Thiruchengode ,Minister ,Arunraj ,Tamil ,Nadu ,Tiruchengode Panchayat Union ,Namakkal district ,
× RELATED பயிர்க்கடன் தள்ளுபடி கோரி உண்ணாவிரதப் போராட்டம்