×

வியாபாரிகள், உழவர்சந்தை விவசாயிகள் மோதல் அபாயம்

 

நாமக்கல், ஜூன் 16: நாமக்கல்லில், உழவர்சந்தை விவசாயிகள்- சாலையோர வியாபாரிகளிடையே மோதல் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், கலெக்டர் ஆபீசுக்கு திரண்டு வந்து மனு அளித்தனர். நாமக்கல் கோட்டை ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதன் அருகாமையில் உள்ள பூங்கா சாலையில் 70க்கும் மேற்பட்ட சிறுவியாபாரிகள் தற்காலிக கடை அமைத்து, பல ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் வேளாண்மை வணிக விற்பனைத்துறை இணை இயக்குனர், உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள தற்காலிக கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் எந்தவித முன்னறிவிப்பின்றி, பூங்கா சாலையில் இருந்த தற்காலிக கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் கடந்த வாரம் அப்புறப்படுத்தினார்கள். இதனால், சுமார் 70 சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்தனர். தொடர்ந்து, கலெக்டர் மதுபாலனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: நாமக்கல் பூங்கா சாலையில், கடந்த 20 ஆண்டுகளாக காய்கறி, பழங்களை சாலையோரங்களில் விற்பனை செய்து வருகிறோம்.

ஒருவழிப்பாதையான பூங்கா சாலையில், எங்களின் தற்காலிக கடைகளால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை. கடந்த வாரம் மாநகராட்சி அலுவலர்கள், எங்களின் கடைகளை முன்னறிவிப்பின்றி போலீஸ் துணையுடன் அகற்றி விட்டனர். விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகளை எடுத்துச் சென்று குப்பையில் கொட்டி விட்டனர். தொடர்ந்து கடை போடக்கூடாது என மிரட்டுகின்றனர். உழவர் சந்தையில் விவசாயிகள் என்ற போர்வையில் வியாபாரிகள் அதிகளவில் உள்ளனர். அவர்களின் தூண்டுதலின் பேரில், உழவர்சந்தை அலுவலர்கள் எங்களது Vதற்காலிக கடைகளை அப்புறப்படுத்தி விட்டனர். இதனால், கடந்த ஒரு வாரமாக எங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்.

எனவே, பூங்கா சலையில் மீண்டும் காய்கறி கடைகள் போட அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சிறு வியாபாரிகளின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மதுபாலன், மாநகராட்சி அலுவலர்களிடம் கொடுத்து இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து சிறு வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நாமக்கல் உழவர் சந்தையில் இங்கிலிஸ் காய்கறி விற்பனை என்ற பெயரில், கேரட், பீட்ரூட், உருளை போன்ற காய்கறிகளை வியாபாரிகள் சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில், உழவர் சந்தையில் கடைகளை பிடித்துள்ளனர்.

இதனால், விவசாயிகள் அல்லாத விவசாய நிலங்களை குத்தகைக்கு பிடித்து, அதில் உற்பத்தியாகும் காய்கறி, பழங்களை வாங்கி வந்து விவசாயிகள் என அடையாள அட்டை பெற்று, உழவர் சந்தையில் வியாபாரத்தை தொடர்ந்து வருகின்றனர். இதை மையமாக வைத்து சிறு வியாபாரிகளுக்கும், உழவர்சந்தை விவசாயிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. தற்போது பூங்கா சாலையில் உள்ள சிறு வியாபாரிகளின் தற்காலிக கடைகளை, உழவர் சந்தை அதிகாரிகளே புகார் கொடுத்து அகற்றியுள்ளதால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல ஆண்டாக இது போன்ற பிரச்னை தொடர்ந்து வரும் நிலையில், மாநகராட்சி, வேளாண்மைத்துறை, காவல்துறை அதிகாரிகள், தற்காலிக கடை வியாபாரிகள் நிரந்தரமாக தொழில் செய்ய இடத்தை ஒதுக்கி கொடுக்காததால், தற்போது பிரச்னை கலெக்டர் வரை சென்றுள்ளது.

Tags : Namakkal ,Collector's Office ,Namakkal Fort Road ,
× RELATED ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய தமிழக முதல்வரிடம் பேசி தீர்வு