- மயிலாடுதுறை
- ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம்
- தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம்
- பரங்கிப்பேட்டை
- கடலூர் மாவட்டம்…
மயிலாடுதுறை: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடியில் நான்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்ட முன்மொழிவை, இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 1,076 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. 14 மாவட்டங்கள் கடல் தொழிலை சார்ந்து உள்ளன. அந்நிய செலாவணியை ஈட்டுவதில் மீன்பிடித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது.
இந்த திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து விடும். சுற்றுச்சூழலில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஏற்படும். எனவே பரங்கிப்பேட்டை மட்டுமின்றி தமிழக கடல் பகுதியில் எங்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என தமிழக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பரங்கிப்பேட்டை கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க கூட்டு கூட்டம் இன்று காலை நடந்தது.
கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பரங்கிப்பேட்டை கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஜெயராமன் அளித்த பேட்டி: தமிழக அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட ஐந்து வட்டங்கள் இந்த பாதுகாப்பு வேளாண் மண்டலத்தில் வருகிறது. ஆனால் விதியை மீறி தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்தால், அப்பகுதியில் கடல் மாசுபாடு மற்றும் மீன்வளம் அழியும்.
நில அதிர்வு சோதனை மீன்களை பாதிக்கும். கடலில் மீனவர்கள் படகுகளில் செல்ல முடியாத நிலைமை ஏற்படும். தமிழகத்தின் அலையாத்தி காடுகளில் ஒரு பகுதி அமைந்துள்ள பரங்கிப்பேட்டை பகுதியில் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அலையாத்தி காடுகள் முற்றிலும் அழியும் நிலைமை உருவாகும். மீனவர்கள் வாழ்வாதாரம் இழக்க நேரிடும். இந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்தால் தொடர்ந்து பெரு நிறுவனங்கள் அடுத்தடுத்து இப்பகுதியில் எண்ணெய் கிணறுகள் அமைக்க முன்வரும். கடற்கரையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும்.
ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு இந்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து கூட்டு போராட்டங்கள் நடத்த திட்டமிட்டு வருகிறோம். போராட்ட சூழல் உருவாவதற்கு தமிழக அரசு இடம் கொடுக்காமல் பொதுமக்கள் நலன் கருதி இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
