×

எதிரி நாடுகளின் தாக்குதலை முறியடிக்கும் 3 அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு

 

புதுடெல்லி: இந்தியா தனது வான்வழி மற்றும் கடல்வழி பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் வகையில் அடுத்த தலைமுறை ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ., கடந்த 10ம் மற்றும் 11ம் தேதிகளில் அடுத்த தலைமுறை பல அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு திறன்களை வெற்றிகரமாக சோதித்து சாதனை படைத்தது. இந்த சோதனையின் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வல்லமையை இந்தியா உலகிற்கு நிரூபித்துள்ளது.

வான்வெளியின் உள்ளேயும், வெளியேயும் பாய்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் மூன்று தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் சர்வதேச அளவில் மிகச்சில நாடுகள் மட்டுமே கொண்டுள்ள அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. தற்போது ‘மிஷன் சுதர்சன் சக்ரா’ என்ற வியூகத்தின் கீழ் நாட்டின் முக்கிய ராணுவ மற்றும் சிவில் கட்டமைப்புகளை பாதுகாக்க கவசமாக இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நடுத்தர தூர கடற்படை எதிர்ப்பு ஏவுகணை, கப்பலில் இருந்து ஏவப்பட்டு கடல் மட்டத்திற்கு மிக அருகில் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை டி.ஆர்.டி.ஓ., தலைவர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டின் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதில் இந்த சோதனை ஒரு முக்கிய மைல்கல்லாகும்’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

Tags : Union Defense Minister ,New Delhi ,India ,Defense Research and Development Organization ,the Union Government ,DRDO ,
× RELATED தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற...