தேனி: சென்னையில் காலமான இயக்குனர் பாரதிராஜாவின் உடல், பெரியகுளம் அருகே காட்ரோடு பிரிவில் உள்ள பண்ணை வீட்டில் இன்று மாலை 3 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. இதில், பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயம் என போற்றப்பட்ட பாரதிராஜா (84), தேனி அல்லிநகரத்தில் 1941ம் ஆண்டு பிறந்தார். இளம்வயதிலேயே நாடகம் போடுதல், நடிப்பதில் ஆர்வம் காட்டிய பாரதிராஜா, சினிமாவில் சாதிக்க சென்னை சென்றார். அங்கு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 16 வயதினிலேயே’ படம் இயக்கி பெரும் புகழ் பெற்றார்.

இதை தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தார். திரையுலகில் இவர் அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகள் ஏராளம். திரைத்துறையில் 6 முறை தேசிய விருது, 3 முறை தமிழ்நாடு அரசு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில், கடந்தாண்டு மகன் மனோஜ்குமார் திடீரென இறந்த பின்னர், பாரதிராஜாவுக்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை நீலாங்கரை வீட்டில் நேற்று அதிகாலை பாரதிராஜா காலமானார். இதை தொடர்ந்து நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முதல்வர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா உள்ளிட்ட திரையுலகினரே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன்படி, தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து வத்தலக்குண்டுவுக்கு செல்லும் சாலையில், கொடைக்கானல் செல்லும் காட்ரோடு பிரிவில் உள்ள பாரதிராஜாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டு தென்னந்தோப்பில், உடலை அடக்கம் செய்ய, அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து நேற்று மாலை திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் மற்றும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிநேகப்பிரியா ஆகியோர் பண்ணை வீட்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இறுதிச்சடங்கு செய்யும் இடம், முக்கிய பிரமுகர்கள் வரும் பகுதி, உடல் அடக்கம் செய்யும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் பேரிகார்டு மூலம் தடுப்பு அமைத்தனர்.சென்னை நீலாங்கரை வீட்டில் நேற்று இரவு 9 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பாரதிராஜாவின் உடல் அதன் பிறகு பிரத்யேக வேன் மூலம் தேனி மாவட்டத்திற்கு புறப்பட்டு வந்தது. இன்று காலை 6.10 மணியளவில் காட்ரோடு பிரிவில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட பாரதிராஜாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பொதுமக்களும், தேனி மாவட்ட திமுக மூத்த நிர்வாகி மூக்கையா உள்ளிட்ட உள்ளூர் அரசியல் கட்சியினரும், திரையுலகினரும் பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில், பண்ணை வீட்டில் முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பண்ணை வீட்டில் இன்று காலை நடிகைகள் ராதிகா, சுகாசினி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். சுகாசினி கூறுகையில், ‘தமிழ் சினிமாவில் யதார்தத்தை கொண்டு வந்தவர் பாரதிராஜா. அவர் இல்லாமல் யதார்தம் இருக்காது.
தமிழ் சினிமாவின் நிறத்தையும், குணத்தையும் மாற்றியது அவர் தான், என்னை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தியது அவர் தான். அவரது 3 படங்களில் நடித்துள்ளேன். அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் ஒருத்தர். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.
