- திருவள்ளூர்
- அரசாங்க மருத்துவமனை
- திருவள்ளூர் அரசு மருத்துவமனை
- ராமஞ்சேரி
- திருவள்ளூர் மாவட்டம்
- கனகம்மா சத்ரம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய வந்தபோது, டாக்டர்கள், நர்ஸ்களை தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்ட ரீல்ஸ் பெண் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த 13 மாணவிகள், கடந்த பிப்ரவரி மாதம் கனகம்மாசத்திரத்தில் உள்ள பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக ராமஞ்சேரி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த அரக்கோணம் பகுதியை சேர்ந்த கயல் விடிகன் (24) உள்ளிட்ட சில போதை வாலிபர்கள், மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசினர். இதை தட்டிக்கட்ட மாணவிகளை வாலிபர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் தாக்கியுள்ளனர்.
இதை கண்டித்து மாணவிகளின் பெற்றோர்கள் சாலை மறியல் செய்தனர். இதில் கஞ்சா போதை வாலிபர்களுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த மதுமிதா (40) என்பவரும் மாணவிகளை தரக்குறைவாக பேசியதுடன் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் பேசினார். இதுகுறித்து 13 மாணவிகளும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் மதுமிதா கைது செய்யப்பட்டார். இவர், ஆபாசமாக ரீல்ஸ் வெளியிடுவதில் பிரபலமானவர். இந்நிலையில், கனகம்மாசத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை, அரக்கோணம் பகுதியை சேர்ந்த அந்த கஞ்சா வாலிபரான கயல் விடிகன் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்ப்பமாக்கினார்.
புகாரின் பேரில், கனகம்மாசத்திரம் போலீசார் போக்சோ வழக்கில் கயல் விடிகனை கைது செய்து சிறையிலடைத்தனர். பின்னர், வெளியே வந்த கயல் விடிகன், மீண்டும் அதே சிறுமியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவரது தாயார் அழைத்து வந்தார். அவர்களுடன் மதுமிதாவும் வந்துள்ளார். அப்போது ஸ்கேன் எடுப்பதற்காக சிறுமியுடன் மதுமிதாவும் செல்ல முயன்றார். டாக்டர்கள் விசாரித்தபோது, ‘நான்தான் சிறுமியின் தாய்’ என கூறியுள்ளார்.
அப்போது அருகில் நின்றிருந்த சிறுமியின் தாய், ‘நான்தான் தாய்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து மதுமிதாவை மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்து வெளியே அனுப்பினர். அப்போது, ‘மதுமிதாவை ஏன் அழைத்து வந்தீர்கள்’ என்று சிறுமியின் தாயிடம் கேட்டுள்ளனர். மேலும், அவர் ஏற்கனவே பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள்’ என்றும் டாக்டர்கள் கூறியுள்ளார். இதையடுத்து ஸ்கேன் எடுத்து விட்டு வெளியே வந்ததும் சிறுமியின் தாயிடம், டாக்டர்கள் பேசியதை எதார்த்தமாக மதுமிதாவிடம் கூறிவிட்டனர்.
இதனால் மதுமிதா ஆத்திரத்துடன், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தகாத வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டார். மேலும் மருத்துவமனை முதல்வர் மோகன் காந்தியிடம் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து உதவி மருத்துவர் சிவகாமி சுந்தரி, திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிவு செய்து மதுமிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே மதுமிதா 4 வழக்குகளில் சிறைக்கு சென்று வந்தது தெரியவந்தது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் அமர்ந்து புகார் எழுதுவது போன்ற ரீல்ஸ் வெளியிட்டு, ‘அந்த ரீல்ஸில் ஒருத்தனையும் விடமாட்டேன்’ என ஒருமையில் தெரிவித்தார். இப்படி பல்வேறு வழக்குகளில் சிறைக்கு சென்று வந்த மதுமிதா மீது குண்டர் சட்டம் பாயுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
