×

கடன் பிரச்னையால் காவல்நிலையம் முன் தந்தை, மகன் தீக்குளிக்க முயற்சி: பாலமேட்டில் பரபரப்பு

 

 

அலங்காநல்லூர்: கடன் பிரச்னையில் பாலமேடு காவல்நிலையம் முன் தந்தை, மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கதுரை. பாலமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர்கணேஷ். நண்பர்களான இருவரும் பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் விவசாய நிலம் வாங்கியுள்ளனர். இதில், சங்கர் கணேஷ் நிலத்திற்கு செல்லும் பாதையை தங்கத்துரை அடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சங்கர் கணேஷ் அதே பகுதியில் தங்கத்துரை உறவினர்களின் இடத்தை விலைக்கு வாங்கி உள்ளார்.

மேலும், தங்கத்துரை நிலத்திற்கு செல்லும் பாதையை அடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தங்கதுரை பாலமேடு காவல்நிலையத்தில் அண்மையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுகூறி காவல் நிலையத்தில் நேற்று மாலை திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இந்நிலையில், தங்கதுரையின் உறவினரான ஆட்டோ டிரைவர் ராமராஜ் என்பவர் தனது தந்தையுடன் காவல் நிலையத்திற்கு வந்தார்.

அவர், சங்கர் கணேஷிடம் இருந்து தான் ரூ.3.30 லட்சம் கடன் பெற்றதாவும், இதற்கு வட்டியாக ரூ.11 லட்சம் வரை தர வேண்டும் எனக்கூறி சங்கர் கணேஷ் பிரச்னை செய்து வருவதாகவும் கூறினார். மேலும், ராமராஜ், அவரது தந்தை ஆகிய இருவரும் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் தர்ணா, தீக்குளிப்பு முயற்சி என அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Palamette ,Alanganallur ,Palamedu police station ,Thangadurai ,Bomminayakanpatty ,Palamed, Madurai district ,Sankarganesh ,Palamedu ,
× RELATED சென்னை பேசின் பிரிட்ஜ் சிக்னலில்...