- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டி. ஆர் பாலூ
- ஆலந்தூர்
- காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அலுவலகம்
- பரங்கிமாலா
- காஞ்சிபுரம்
- வடக்கு மாவட்டம்
- கோல்ட் பிரகாஷ் தலை
ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், கலைஞரின் 103வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் குடும்ப விழா பரங்கிமலையில் உள்ள காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் தலைமை வகித்தார். ஆலந்தூர் பகுதி செயலாளர்கள் பி.குணாளன், என்.சந்திரன், ஒன்றிய செயலாளர் வந்தேமாதரம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபு முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கலாநிதி குணாளன் வரவேற்றார். இதில், கலைஞர் எனும் திராவிடப் போராளி என்ற தலைப்பில் சூர்யா கிருஷ்ணமூர்த்தியும் கலைஞர் எனும் பீனீக்ஸ் பறவை என்ற தலைப்பில் தேரடி இந்திரகுமாரும் வாதிட்டு கலைஞரின் சாதனைகளை எடுத்துரைத்தனர்.
இந்த கருத்தரங்கில் டி.ஆர்.பாலு பேசியதாவது: காணாமல்போன வெற்றி மிக அருகில் தான் உள்ளது. அதனை தேடி கண்டுபிடித்து மீண்டும் அழைத்து வரவேண்டும். மிக, மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளோம். வெற்றியும் தோல்வியும் அடிக்கடி வருவது உண்டு. தோல்வி வரும்போது துவண்டு விடாமலும் வெற்றி வரும்போதுஆர்ப்பரிக்காமலும் நமது இயக்கம் வளர்ந்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில் இளைஞர் அணியினர்தான் வெற்றியை தேடி கொடுத்துள்ளனர். ஆகவே இளைஞர்களின் பணி இயக்கத்துக்கு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் வரும். இவ்வாறு பேசினார்.
இதில், தா.மோ.அன்பரசன் பேசியதாவது; குழந்தைகளை பள்ளிக்கு சாப்பாட்டு கூடையுடன் அனுப்புவதுபோல் முதலமைச்சர் விஜய்யை தலைமை செயலகம் அழைத்து வந்து மாலை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச்சென்று விடுகின்றனர். முதலமைச்சரை தனது கட்டுப்பாட்டில் ஆதவ் அர்ஜூனா வைத்துள்ளார். திமுக அரசு மூடிய டாஸ்மாக் கடைகளை எல்லாம் தவெக மூடியதுபோல் கணக்கெடுத்து வருகின்றனர். தவெக ஆட்சிக்கு வந்த 24 நாட்களில் கொலை, கொள்ளை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் என 266 குற்றங்கள் நடந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள். இந்த ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவ்வாறு பேசினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்ஆர். ராஜா, வி.என்.பி வெங்கட்ராமன், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன், கவுன்சிலர்கள் செல்வேந்திரன், சாலமோன் தேவி யேசுதாஸ், அமுத பிரியா, மகளிரணி பாண்டிச்செல்வி, சங்கீதா கலந்துகொண்டனர்.
