வாஷிங்டன்: கட்டாய உழைப்பு தொடர்பான விதிகளை முறையாக கடைபிடிக்க தவறியதால் இந்தியாவுக்கு 12.5% கூடுதல் இறக்குமதி வரியை விதிக்க அமெரிக்கா பரிசீலிக்கிறது. இது, அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இந்தியா தவிர மேலும் 53 நாடுகளுக்கும் கூடுதல் வரிகளை விதிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதால் உலக பொருளாதாரத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு, அவரது அதிரடி முடிவுகள் உலக நாடுகளை கலக்கமடைய செய்துள்ளன. குறிப்பாக, வர்த்தக விவகாரத்தில் அமெரிக்காவின் நலனுக்கு மட்டுமே டிரம்ப் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுப்பதால், வர்த்தக பற்றாக்குறை கொண்ட அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பர வரி விதிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதனால், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி கணிசமாக சரிந்தது. குறிப்பாக, ஜவுளி உள்ளிட்ட தொழில் துறையினர் பாதிக்கப்பட்டனர்.
இதன் பின்னர், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொண்டதால் 25 சதவீத வரியை நீக்கிய அதிபர் டிரம்ப், கடந்த பிப்ரவரியில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இந்திய இறக்குமதி பொருட்களுக்கான வரியை 18 சதவீதமாக குறைத்தார். இதுதவிர, இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. ஓராண்டுக்கு பிறகு இப்போதுதான் இப்பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
இந்நிலையில், கட்டாய உழைப்பு தொடர்பான விதிகளை முறையாக கடைபிடிக்க தவறியதால் இந்தியா மீது 12.5 சதவீதம் கூடுதல் இறக்குமதி வரியை விதிக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பரிந்துரைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க வர்த்தக சட்டத்தின் பிரிவு 301ன் கீழ், கட்டாய உழைப்பை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முக்கிய வர்த்தக பங்குதாரர்கள் ஏற்றுக்கொண்டு, அவற்றை திறம்பட அமல்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பல மாத விசாரணையை தற்போது முடித்துள்ளார். இந்த விசாரணையில், உலகளாவிய விநியோக சங்கிலிகளில் கட்டாய உழைப்பு தொடர்பான கவலைகளை கையாள்வதில் 60 நாடுகள் குறைபாடுகளை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இத்தகைய தோல்விகள் அமெரிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது ஒரு நியாயமற்ற போட்டியை உருவாக்குவதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறி உள்ளது.
எனவே, கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவும் 2 விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி அளவு தடைகள் கொண்ட கனடா, ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோ, இந்தோனேசியா, மலேசியா, தைவான் மற்றும் இங்கிலாந்துக்கு 10 சதவீத கூடுதல் வரியும், போதுமான தடைகளை விதிக்க தவறிய இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 12.5 சதவீத வரியும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி மற்றும் தூதர் ஜேமிசன் கிரீர் கூறுகையில், ‘‘எங்களின் மிக முக்கியமான வர்த்தக பங்குதாரர்கள், கட்டாய உழைப்பை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யும் விவகாரத்தைக் கையாள தவறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது அமெரிக்க தொழிலாளர்கள் உலக அளவில், சமமற்ற ஒரு களத்தில் போட்டியிட வேண்டிய சூழலை உருவாக்குகிறது.
இந்த ஏற்றத்தாழ்வை நாங்கள் இனிமேலும் சகித்துக்கொள்ள மாட்டோம்’’ என கூறி உள்ளார். இந்த கூடுதல் வரி குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், இது அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஏற்கனவே மேற்கு ஆசியா போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக பொருளாதாரத்திற்கு கூடுதல் சுமையையும் ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
* பிடிக்காத பிரேசிலுக்கு 25% வரி பரிந்துரை
அமெரிக்க வர்த்தகத்திற்கு சுமையாக அல்லது தடையாக இருக்கும் வர்த்தக நடைமுறைகளில் பிரேசில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி அந்நாட்டிற்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பரிந்துரைத்துள்ளார். அவர் நடத்திய விசாரணையில், பிரேசில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மெத்தனமாக இருப்பதாகவும், நியாயமற்ற வரிகளை விதிப்பதாகவும் மேலும் பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பிரேசிலுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் பிரேசில் நீண்டகாலமாக கடுமையான வர்த்தக பற்றாக்குறையை கொண்டுள்ளது.
* ஜவுளி தப்பியது
அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் பரிந்துரையில், பிரிவு 232ன் கீழ் வரும் துறை சார்ந்த வரிகளுக்கு உட்பட்ட பொருட்கள் மற்றும் வேறு சில குறிப்பிட்ட பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய வர்த்தக அமைச்சகம் கூறி உள்ளது. ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்காக ஒரு சிறப்பு வழிமுறை முன்மொழியப்பட்டுள்ளதால், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட அளவிலான பொருட்கள், குறைந்த வரி விகிதத்தில் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
* கட்டாய உழைப்பு என்றால் என்ன?
இந்தியாவில் கட்டாய உழைப்பு மற்றும் கொத்தடிமை முறை அரசியலமைப்பு சட்டப்பிரிவு-23 மூலம் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், செங்கல் சூளைகள், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இன்னும் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஒரு நபர் தனது முழு விருப்பத்துடன் ஒப்புக்கொள்ளாமல், தண்டனை அல்லது அச்சுறுத்தலின் கீழ் செய்ய நிர்பந்திக்கப்படும் எந்தவொரு வேலையும் அல்லது சேவையும் கட்டாய உழைப்பு என குறிப்பிடப்படுகிறது. இது மனித உரிமைகளை மீறும் நவீன அடிமைத்தனம் என சர்வதேச சட்ட விதிகள் வரையறுக்கின்றன.
* இந்தியா பேச்சுவார்த்தை
பரிந்துரைக்கப்பட்ட வரிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. சம்மந்தப்பட்ட நாடுகள், பொது விசாரணைகளில் பங்கேற்க, வரும் 22ம் தேதிக்குள் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். எழுத்துப்பூர்வமான கருத்துகளை ஜூலை 6 வரை சமர்ப்பிக்கலாம். இதுகுறித்து பொது விசாரணை ஜூலை 7 நடைபெறும்.
இறுதி முடிவு மேற்கொள்வதற்கு முன்பாக இக்கருத்துகளை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி குழு பரிசீலிக்கும். தற்போது இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒன்றிய வர்த்தக அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
* அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு, பரஸ்பர வரி அடிப்படையில் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.
* ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொண்டதால் 25 சதவீத வரியை அதிபர் டிரம்ப் நீக்கினார்.
* கடந்த பிப்ரவரியில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இந்திய இறக்குமதி பொருட்களுக்கான வரியை 18 சதவீதமாக குறைத்தார்.
* தற்போது கட்டாய உழைப்பு தொடர்பான விதிகளை முறையாக கடைபிடிக்க தவறியதால் இந்தியா மீது 12.5 சதவீதம் கூடுதல் இறக்குமதி வரியை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
