×

அனைத்துத் திட்டப்பணிகளையும் எவ்விதத் தொய்வுமின்றி, துரிதமாகவும், தரமாகவும் செய்து முடிக்க வேண்டும்: அமைச்சர் என்.ஆனந்த்

 

செங்கல்பட்டு: திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் ஆய்வு செய்தார். முதலாவதாக, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து பின்னர், வீடுகள் வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சாலைகள் மற்றும் பாலங்கள், சிறுபாசன ஏரிகள், CSR Funding, SFC Grant பணிகள், சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, கேளம்பாக்கம் ஊராட்சியில் தற்பொழுது நடைபெற்று வரும் பல்வேறு முக்கியத் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையை ஆய்வு செய்தார். இங்கு தற்பொழுது 10,000 மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்டு, அவற்றை முறையாகப் பராமரிக்க அறிவுறுத்தினார். மேலும் கிராமப்புற எரிசக்தித் தேவையை நிறைவு செய்யும் நோக்கில், ரூபாய் 50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பயோ கேஸ் உற்பத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்தார்.

பிறகு நெகிழிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரூபாய் 7.82 லட்சம் திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக் முறைப்படுத்துதல் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
ஊராட்சியைத் தூய்மையாகப் பராமரிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப்பணிகளையும் அமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார். ஆய்வின் போது அமைச்சர், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துத் திட்டப்பணிகளையும் எவ்விதத் தொய்வுமின்றி, துரிதமாகவும், தரமாகவும் செய்து முடிக்க வேண்டும்.

சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டப்பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவினை நனவாக்கும் வகையில், திட்டங்களைச் செயல்படுத்தும்போது முழு வெளிப்படைத் தன்மையுடனும், தரத்துடனும் செயல்பட்டு, அவை பொதுமக்களுக்கு முழுமையாகப் பயனளிப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்கள். இந்த ஆய்வின் போது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எம். வீரப்பன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் எம். கணேஷ் குமார், திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, துணை மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : Minister ,N. Anand ,Chengalpattu ,Rural Development and Water Resources, N.J. ,Tiruporur Uratchi Union ,Anand ,Tiruporur Uradashi Union Office ,
× RELATED கட்டாய உழைப்பு முறை...