×

வேடசந்தூர் அருகே கோயில் திருவிழாவில் துடைப்பத்தால் அடித்து விநோத நேர்த்திக்கடன்

 

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்த அய்யலூர் அருகே, தீத்தாக்கிழவனூர் கிராமத்தில் சக்தி விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பட்டவன் சுவாமி கோயில்கள் உள்ளன. இக்கோயில்களின் ஆண்டு திருவிழா கடந்த 31ம் தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மன் வீதிஉலா, பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம், அக்னிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் இறுதி நாளான நேற்று மாலை விநோத நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துபவர்களின் முகத்தில் வண்ணப் பொடிகளை பூசி, மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். அதன்பின் கோவிலில் சாமி தரிசனம் செய்து கோயில் முன்பாக அமர்ந்தனர். இதனைத் தொடர்ந்து மண் கலயத்தில் மாடுகளின் கஞ்சித் தொட்டியில் உள்ள பழைய சாதத்தை எடுத்து வந்து, செருப்பு மற்றும் துடைப்பத்தில் தொட்டு ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி தலையில் அடித்தனர். பின்னர் கால்களால் தலையில் உதைத்தும், செருப்பு மாலை அணிவித்தும் விநோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் அனைவரும் உடலில் சேறு பூசி, கோயில் குளத்தில் நீராடி நிறைவு செய்தனர். இதை தொடர்ந்து அம்மன் பூஞ்சோலை சென்றடைதலுடன் திருவிழா நிறைவு பெற்றது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கோயில் திருவிழாவையொட்டி இது போன்ற நேர்த்திக்கடனை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். இதன்மூலம் கோடை காலத்தில் சருமம் மற்றும் உஷ்ண நோய்கள் ஏற்படாமல் இருக்கும். துடைப்பம், செருப்பால் அடி வாங்குவதன் மூலம் மனதில் சகிப்புத்தன்மை உருவாகும்’ என்றனர்.

Tags : Vedasandoor ,Dindigul district ,Ayyalur ,Shakti ,Vinayagar ,Kaliyamman ,Mariyamman ,Patawan Swami ,Dithakchhavanur ,Amman Vidiulla ,Tukuzhi ,Descent ,
× RELATED சென்னை மெட்ரோ சார்பில் கிண்டியில்...