×

மீண்டும் வெற்றி சரிதத்தை எழுதுவோம்… உதயசூரியனின் ஒளியால் தமிழகத்தை சூழ்ந்துள்ள இருளை விரட்டுவோம்…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக, தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னத தலைவர் என்று தனது தந்தையும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

நீங்கள் நிறைந்த போது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது. உறுதியாய்ச் சொல்கிறோம்…மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்! என்று மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Chennai ,Former Chief Minister ,Karunanidhi ,M. K. ,Chennai Marina ,M. K. Chairman ,Mu. K. Stalin ,
× RELATED அந்நிய செலாவணி கையிருப்பை தக்க வைக்க...