×

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை: உடன் வந்தவர்களை அடித்து விரட்டி நகை, பணம் கொள்ளை

* 25க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்து சீரழிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி சித்ரவதை செய்து, நகைகளை கொள்ளையடித்த 8 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கைப்பற்றிய செல்போன்களில் 25க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கும்பலை சேர்ந்த சிறுவன் உட்பட 3 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் ஒரு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார்.  இவர் தனது தோழியுடன் கடந்த 31ம் தேதி இரவு பவுர்ணமியன்று கிரிவலம் சென்றார். சுமார் 7 கி.மீ. தூரம் கிரிவலம் சென்ற அந்த பெண், திருநேர் அண்ணாமலை கோயில் அருகே செல்லும்போது, கடுமையான கால் வலியால் நடக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். எனவே, தொடர்ந்து தன்னால் நடக்க முடியாது எனவும், நண்பரை வரவழைத்து பைக்கில் வீட்டுக்கு செல்வதாகவும் தோழியிடம் தெரிவித்துள்ளார்.

எனவே, தோழி மட்டும் தொடர்ந்து கிரிவலம் சென்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து, பைக்கில் அங்கு வந்த நண்பருடன் கிரிவலப்பாதையில் இருந்து, அத்தியந்தல் புதிய பைபாஸ் சாலை வழியாக வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பைக்கை பின்தொடர்ந்து 2 பைக்குகளில் சென்ற நான்கு வாலிபர்கள், ஆட்கள் நடமாட்டம் இல்லாத அத்தியந்தல் ஏரிக்கரை பகுதியில் பைக்கை தடுத்து வழிமறித்துள்ளனர். பின்னர், பைக்கில் அழைத்துச்சென்ற வாலிபரை அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

பின்னர் இளம்பெண் அணிந்திருந்த கம்மல், செயின் உள்ளிட்ட நகைகளை அபகரித்துக்கொண்டு, அந்த பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்து செல்போனில் வீடியோ எடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தங்களுடைய நண்பர்கள் சிலரையும் அங்கு வரவழைத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சுமார் 3 மணிநேரம் இளம்பெண்ணை நிர்வாணமாக அமர வைத்து மிரட்டி உள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பி சென்ற இளம்பெண், திருவண்ணாமலை மேற்கு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டார். இதுதொடர்பாக, திருவண்ணாமலை ரூரல் டிஎஸ்பி ராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. இதில், திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன்(27) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் வாசுதேவனின் செல்போனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அதில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவரது நண்பர்களான அடையூரை சேர்ந்த ஆகாஷ், பெரிய பாலியப்பட்டு கிராமம் தமிழ் என்கிற தமிழரசன், அஸ்வநாதசுரணை பகுதியை சேர்ந்த அப்பு, லேலே என்கிற அரிகரன், சர்மா, சேந்தமங்கலத்தை சேர்ந்த அருண்குமார், பாவாஜி நகரை சேர்ந்த சிவகணேசன் என்கிற சூர்யா ஆகிய 7 பேரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில், 25க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் ஆபாச வீடியோக்கள் பதிவாகியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கும்பல் தனியாக அல்லது ஆண் நண்பர்களுடன் கிரிவலம் செல்லும் இளம்பெண்களை மிரட்டி அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம், நகைகள் ஆகியவற்றை அபகரித்துள்ளனர்.

இதேபோல, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான மற்றொரு இளம்பெண் கடந்த 30ம் தேதி பவுர்ணமி கிரிவலம் முடிந்து இரவு மீண்டும் உறவினருடன் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலை- செங்கம் சாலையில் பெரியபாளிப்பட்டு அருகே உறவினர் இயற்கை உபாதை கழிக்க பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து வந்த கும்பல், உறவினரை தாக்கி அங்கிருந்து விரட்டி உள்ளனர். பின்னர் இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்துள்ளனர்.

தொடர்ந்து பல மணிநேரம் அங்கேயே நிர்வாணமாக அமர வைத்து மிரட்டி பணம், நகைகளை பறித்துள்ளனர். இதுதொடர்பாக இளம்பெண் நேற்றிரவு திருவண்ணாமலை மேற்கு போலீசில் புகார் அளித்தார். ஏற்கனவே கைதானவர்கள் தான் இந்த இளம்பெண்ணிடமும் அத்துமீறலில் ஈடுபட்டு ஆபாச வீடியோ எடுத்தது தெரியவந்தது.  இதேபோல் செல்போன்களில் உள்ள வீடியோக்களில் பதிவாகியுள்ள இளம்பெண்கள் குறித்தும் போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து நடத்தும் தீவிர விசாரணையில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற இளம்பெண்களை மிரட்டி கும்பல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

* காவல் நிலையம் அருகிலேயே கொடூரம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சமீப காலமாக பக்தர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையங்கள் பயன்பாடு இல்லாமல் பூட்டி வைத்துள்ளனர். 24 மணி நேரமும் பைக் ரோந்து நடைபெறும் என்ற அறிவிப்பும் முழுமையாக பின்பற்றுவதில்லை.

மேலும், இரவு நேர ரோந்துப்பணியில் போலீசார் கவனம் செலுத்துவதில்லை என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கிரிவலப்பாதையில் பக்தர்களின் பாதுகாப்புக்காகவே மேற்கு காவல் நிலையம் தொடங்கப்பட்டது. ஆனால், அந்த காவல் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தூரத்திலேயே இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இரவு நேரங்களில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில், போலீசார் தொடர்ந்து ரோந்துப்பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும் எனவும், குறிப்பாக கிரிவலப்பாதையை இணைக்கும் சாலைகள் இருள் சூழ்ந்து குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதியாக மாறியிருப்பதால் அங்கும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதோடு, கிரிவலப்பாதையில் பொருத்தியிருக்கும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களும் பெரும்பாலான நேரங்களில் செயல்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. எனவே, நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

* போலி சாமியார்கள் மூலம் கஞ்சா நடமாட்டம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியிருக்கும் சாமியார்களில், சிலர் குற்றப் பின்னணி உள்ள நபர்களாக இருப்பது சமீபத்தில் நடத்திய போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும், அவர்களை நிரந்தரமாக அப்புறப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இங்குள்ள போலி சாமியார்கள் மூலம், கஞ்சா நடமாட்டம் சமீபகாலமாக பெருகியிருக்கிறது.

அவர்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கைகளுக்கு மாறும் கஞ்சா, பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற அடித்தளமாக அமைகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு, கிரிவலப்பாதையில் பொருத்தியிருக்கும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களும் பெரும்பாலான நேரங்களில் செயல்படுவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

* தனியாக அல்லது ஆண் நண்பர்களுடன் கிரிவலம் செல்லும் இளம்பெண்களை இக்கும்பல் மிரட்டி அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம், நகைகள் ஆகியவற்றை அபகரித்துள்ளது.

* இந்த கும்பல் தங்களுடைய நண்பர்கள் சிலரையும் வரவழைத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர்.

* பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள வீடியோக்களில் பதிவாகியுள்ள இளம்பெண்கள் குறித்தும் போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Krivalam ,Tiruvannamalai ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம்...