×

டெல்லியில் அண்ணாமலை… உடனே வர நயினாருக்கு அவசர அழைப்பு: தமிழ்நாடு பாஜகவில் உச்சகட்ட பரபரப்பு

 

டெல்லி: தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை டெல்லி வரும்படி அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை 2021ம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் 2025ம் ஆண்டு வரை தலைவர் பதவியில் நீடித்தார். அதன் பிறகு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். தலைவர் பதவி மாற்றப்பட்டதும், அவருக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்து இருந்தார். ஆனால், இதுவரை அவருக்கு தேசிய அளவில் எந்தவித பதவியும் வழங்கப்படவில்லை.

இதனால், அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். அதே நேரத்தில் அவரது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தொடர்ந்து சட்டசபை தேர்தலில் களம் காண அண்ணாமலை தயாராக இருந்தார். கோவை வடக்கு அல்லது திருப்பூர் வடக்கு ஆகிய தொகுதிகளில் ஒன்றில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 தொகுதிகளும் வழங்கப்படவில்லை. இதனால், கடும் அதிருப்தியில் அண்ணாமலை இருந்து வந்தார். இதனால் சட்டசபை தேர்தலிலும் முழு வீச்சில் அவர் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. பெயரளவுக்கு மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக. ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இது பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சியிலும் பெரிய அளவில் பொறுப்பு வழங்கப்படாததால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரை தனிக்கட்சி தொடங்கக் கோரி வலியுறுத்தி வந்தனர். ஆனால், பதில் எதுவும் சொல்லாமல் அண்ணாமலை அமைதி காத்து வந்தார். பாஜக தலைமையும் அவரை சமரசம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் பாஜக அரசின் மும்மொழிக் கொள்கைக்கு திடீரென எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், பா.ஜ.க.வை விட்டு அண்ணாமலை வெளியேறப்போவது உறுதி என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை அவசரம், அவசரமாக அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை, பாஜக கொடியில்லாத காரில் வந்தார். விமான நிலையத்தில் அண்ணாமலையிடம் தனிக்கட்சி தொடங்க போகிறீர்களா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அண்ணாமலை, “2 நாட்கள் கழித்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். விரிவாக பேசலாம்” என்று கூறிச் சென்றார். இதனால், 2 நாட்களில் அண்ணாமலை என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார். மேலும் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷையும் சந்தித்து பேசினார். தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சந்திப்பின்போது புத்தகத்தை பரிசாக அளித்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை டெல்லி வரும்படி அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை சந்திப்பை அடுத்து இன்றிரவு அல்லது நாளை அமித் ஷாவை நயினார் நாகேந்திரன் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

Tags : Annamalai ,Delhi ,Nainar ,Tamil Nadu ,Bhajaka DELHI ,AMIT SHAH ,BJP ,NAINAR NAGENDRAN ,Tamil BJP ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம்...