* மறுப்பதால் மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதாக கட்சியினர் குற்றச்சாட்டு
சென்னை: ராஜினாமா செய்ய விருப்பம் இல்லாத எம்எல்ஏக்களை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைக்கும் முயற்சியில் வைகோ ஈடுபட்டுள்ளதாக மதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பல அரசியல் கணக்குகளை மாற்றி எழுதும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. திமுக வலுவான கூட்டணி அமைத்த போதும், புதிய வரவான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் திணறியது. இதையடுத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக உடன் கைகோர்த்திருந்த விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தன.
தவெக ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு என்றும், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்தன. ஆனால் அந்த கட்சிகளை அமைச்சரவையில் இடம்பெற செய்து, பதவி ஆசை காட்டி வருவதால் தற்போது தவெக பக்கம் சாயும் நிலையில் உள்ளன. அந்த கட்சிகளில் முக்கிய தலைவர்களுக்கு வாரிய பதவி என பதவி ஆசை காட்டி தவெக பக்கம் இழுக்கும் செயல்களில் தவெக ஈடுபட்டுள்ளது. இதனால், அடுத்த நாட்களில் ஆதரவு தெரிவித்த கட்சிகளில் ஒரு சில திமுகவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்க தொடங்கியது. அமைச்சரவையிலும் இடம்பெற்றன. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மற்றுமொரு கூட்டணி வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 4 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இதில் கடையநல்லூர் தொகுதியில் டி.எம்.ராஜேந்திரன், சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வன் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் மதிமுகவின் போக்கில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. பதவி ஆசை யாரைத்தான் விடாது என்ற அடிப்படையில், அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தற்போது மதிமுகவும் தவெகவுடன் இணையும் முடிவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலைஞர் மகன் மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று மேடைக்கு மேடை பேசிய வைகோ தற்போது தவெக வீசிய தூண்டிலில் சிக்கியுள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். அமைச்சர் பதவி என்ற அடிப்படையில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் எதிரொலியாகத் தான் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூற சென்ற முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த மதிமுக எம்பி துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் அவரை வரவேற்றுள்ளார். இதன் மூலம் தவெக ஆதரவு என்ற நிலைபாட்டை மதிமுக எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மதிமுகவில் தற்போது உதயசூரியன் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை திமுக எம்.எல்.ஏக்கள் கணக்கில் சேர்ந்துவிடும். ஆகையால் தவெகவிற்கு ஆதரவு எனக் கூறிவிட்டு மதிமுக எம்எல்ஏக்களை நகர்த்த முடியாது. இதற்கு ஒரே வழி தங்கள் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, தவெக உடன் கூட்டணி அமைத்து அதன்பிறகு வரும் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும். ஏற்கனவே திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகள் காலியாக இருக்கின்றன.
இதனுடன் மதிமுகவின் 2 தொகுதிகளுக்கும் சேர்த்து 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 27ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் நகர்வுகள் குறித்தும், அடுத்த கட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகி தவெக கூட்டணியில் இணையும் பட்சத்தில் மதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் போட்டியிட வைக்க வைகோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோவின் இந்த முடிவுக்கு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் ஒரு அமைச்சர் பதவி என தவெக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. யாராவது ஒரு எம்எல்ஏவுக்கு மட்டுமே அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் மற்றொருவர் அதிருப்தி அடையக்கூடும், மேலும் உதயசூரியன் சின்னத்தின் நின்றதால் தான் வெற்றி பெற்றோம் என்றும், மீண்டும் போட்டியிட்டால் வெற்றி கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான் என்றும், எனவே தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதாகவும் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆனாலும் வைகோ தரப்பு அவர்களை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகி வரும் தகவல் மதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக ஆதரவு கொண்ட தரப்பு எம்எல்ஏக்கள் பக்கம் இருப்பதால் வைகோ எடுக்கப் போகும் முடிவை வைத்து மதிமுக இரண்டாக உடையவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
