ஜோலார்பேட்டை: கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய பட்டாரி இளம்பெண், ஜோலார்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தார். அங்கு வந்தவர்களிடம் மது வாங்கி குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சுமார் 36 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். அப்போது அவர் மதுபோதையில் இருந்துள்ளார்.
டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்தவர்களிடம், தனக்கும் மது வாங்கி தர வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார். ஒரு சிலர் மது வாங்கி கொடுத்துள்ளனர். அதை அவர் ராவாக குடித்துள்ளார். காலை முதல் இரவு வரை அங்கேயே இருந்தபடி மது குடித்ததால் அதிகளவு போதையில் அங்கு வருபவர்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிக்கு சென்று மதுபோதையில் சுற்றித்திரிந்த பெண்ணை போலீசார் தேடினர்.
அப்போது டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள பகுதிக்கு போதை ஆசாமிகள் சிலர், அந்த பெண்ணை அழைத்து சென்று பேசிக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை அறிந்த போதை ஆசாமிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணை மீட்டு குடும்பத்தாரின் செல்போன் எண்ணை வாங்கி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் ஆந்திர மாநிலம் குப்பம் மாவட்டம், மல்லானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லை. இவரது கணவர் சமையல் மாஸ்டராக உள்ளார். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 10 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஆந்திர மாநிலம் மல்லானூரில் இருந்து பெண்ணின் உறவினர்களை வரவழைத்து, அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

