×

காங்கிரசின் போலி பாஜ எதிர்ப்பும் பல்லிளிக்கிறது குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்: மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

 

சென்னை: குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம் நடக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரசின் போலி பாஜ எதிர்ப்பும் பல்லிளிக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்களான மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேர் தங்களுடைய எம்எல்ஏ பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தனர்.

பதவியை ராஜினாமா செய்த மறுநிமிடமே மூவரும் தலைமை செயலகத்தில் உள்ள பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தில் அவரது முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்து ‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம் என்று மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம். காட்சி 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

காட்சி 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அமமுக. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.

காட்சி 3: அதிமுக உறுப்பினர்கள் சிலரை பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?.

‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். என்டிஏ ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்து விட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பாஜ எதிர்ப்பும் பல்லிளிக்கிறது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Congress' ,BJP ,MK Stalin ,Chennai ,AIADMK ,Madhurantakam ,Maragatham Kumaravel ,Perundurai Jayakumar ,Tarapuram Sathyabhama ,
× RELATED கோவையில் சிறுமி படுகொலை:...