×

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!!

டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9,10ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் 3வது மொழி கற்க வேண்டும் என்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் ரோஹத்கி கோரிக்கையை ஏற்று மனுவை அடுத்த வாரம் பட்டியலிட தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் சிபிஎஸ்இ கொள்கையை எதிர்த்து மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், ஜூலை 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, குறைந்தது இரண்டு இந்தியத் தாய்மொழிகள் உட்பட மூன்று மொழிகளை கற்க வேண்டும் என்பதை சி.பி.எஸ்.இ கட்டாயமாக்கியுள்ள நிலையில், எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்த வாரம் விசாரிக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி இந்த வழக்கைக் குறிப்பிட்டார். இது ஒரு அவசர பொதுநல வழக்கு. மனுதாரர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆவர். 9-ஆம் வகுப்பில் மேலும் இரண்டு மொழிகளைக் கட்டாயமாக்கியுள்ள சிபிஎஸ்இ-யின் புதிய கொள்கையை எதிர்த்து அவர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்,” என்று முகுல் ரோஹத்கி கூறினார்.

இதனை தொடர்ந்து வழக்கறிஞர் ரோஹத்கி கோரிக்கையை ஏற்று மனுவை அடுத்த வாரம் பட்டியலிட தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Supreme Court ,CBSE ,Delhi ,Chief Justice ,Rohatki ,
× RELATED எபோலா வைரஸ் பரவல்: முன்னெச்சரிக்கை,...